கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இது பல்வேறு துறைகளில் வெளிப்பட்டு வந்தது. தற்போது உயர்கல்வித் துறையில் இது மீண்டும் வெளிப்பட்டுள்ளது. நாளை (ஜூலை 2) அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவர் முறைகேடு புகார்களில் சிக்கி அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என கல்லூரி பேராசிரியர்களும், தமிழக அரசும் வலியுறுத்தியது. இந்நிலையில் அவரது பதவிக்காலத்தை ஓராண்டிற்கு நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை நடைபெறும் அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாக கூறப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 44-வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் பங்கேற்பார் என அழைப்புதழில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் விழாவை புறக்கணிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“