/indian-express-tamil/media/media_files/2025/10/14/stalin-mini-statium-2025-10-14-19-24-22.jpg)
அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம்: ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்- 2025 நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
பின்னர், நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். அப்போது அவர் விளையாட்டுத் துறைக்கு அரசு ஒதுக்கிய நிதி குறித்து பேசினார்
நிதி ஒதுக்கீடு: அ.தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளில் விளையாட்டுத்துறை உட்கட்டமைப்புக்கு ரூ.170.31 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் உட்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.601.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறைக்கென மொத்தமாக ரூ.1,945.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். தமிழகம் போல் வேறு எந்த மாநிலத்திலும் விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற உதவி கிடைப்பதில்லை என்று ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
விளையாட்டுத் துறையின் பொற்காலம்: "தி.மு.க. ஆட்சி விளையாட்டுத் துறையின் பொற்காலம்," என்று அவர் குறிப்பிட்டார். மேலும், "உங்களுக்கான அத்தனை வாய்ப்புகளையும் உருவாக்குகிறோம். விளையாட்டில் கவனம் செலுத்தி, வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித் தாருங்கள்," என்று வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
துணை முதல்வருக்குப் பாராட்டு: இத்தனை திறமையான இளைஞர்களை அடையாளம் காண்பதற்காக உழைத்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இளைஞர்களின் நலனையும், விளையாட்டுத் துறையையும் ஒரு 'The Young and Energetic Minister'-யிடம் ஒப்படைத்தால், அது எப்படி வெற்றிகரமாக அமையும் என்பதற்குத் தமிழ்நாடு எடுத்துக்காட்டாக அமைந்து இக்கிறது என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இந்த விழாவில் துணை முதல்வருர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- தமிழகம் விளையாட்டுத் துறையில் நம்பர் ஒன் இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக, கலைஞர் முதல்வாராக இருக்கும்போது விளையாட்டுத்துறைக்கென தனி அமைச்சகத்தை முதன்முதலாக அமைத்தார்.
கலைஞர் லட்சியத்தை அடையும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு விளையாட்டிலும் நம்பர் ஒன் இடத்தை அடைந்து கொண்டிருக்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் 2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள். விளையாட்டு புரட்சியை, மாபெரும் இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. 2023-ல் சுமார் 4 லட்சம் வீரர்கள் கலந்து கொண்டனர். 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதிலிருந்து போட்டிக்கான வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் புரிந்து கொள்ளலாம். விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான் இதனுடைய ஒரே நோக்கம்.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிக்கு அனுப்புவதற்கான ஏவுதளம்தான் (Launching Pad) இந்த முதலமைச்சர் கோப்பை கேம்ஸ். பயிற்சியும், உறுதியும் இருந்தால் நிச்சயம் சாதித்து காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கிறது. அனைத்து உதவிகளையும் செய்ய முதலமைச்சர் தயாராக இருக்கிறார். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.