நிதிநிலை சரியான பிறகு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, 2019ஆம் ஆண்டு வரை சுமார் 48 லட்சம் மாணவ,மாணவிகளுக்கு இலவசமடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலால் மடிக்கணினி கொள்முதலில் சிக்கல் ஏற்பட்டது.
அதன்பின் உலகளவில் மடிக்கணினி தயாரிப்புக்கு தேவையான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் அதன் விலை வெகுவாக உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.
இதனிடையே, மடிக்கணினிக்கு பதிலாக டேப்லெட் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கைவிடவில்லை. சர்வதேச மந்தநிலை காரணமாக கொள்முதலில் தாமதம் நிலவுகிறது. அந்த பணிகள் முடிந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் இதுவரை மடிக்கணினி குறித்த எந்த தகவலும் இல்லை.
நிதி நிலைமை, லேப்டாப் தயாரிக்க மூலப்பொருள்கள் உள்ளிட்டவற்றை பொறுத்து இந்த கல்வி ஆண்டில் லேப்டாப் வழங்கப்படும். டேப் வழங்கலாமா? எது உபயோகிக்க ஏற்றதாக இருக்கும்? என்று ஆலோசித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழா தஞ்சாவூரில் உள்ள நிப்டெம் என்று அழைக்கப்படும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (NIFTEM-T) பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்றது.
இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு லேப்டாப்புகளை வழங்கினார். தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 13 மாணவர்கள் நிப்டெம் மத்திய அரசு நிறுவனத்தில் பயில்கின்றனர். அம்மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக லேப்டாப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். தொடர்ந்து அவர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாதிரி பள்ளித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் என்.ஐ.டி., ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி வருகிறோம்.
நிதிநிலை சரியான பிறகு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். கடந்த கால ஆட்சியில் 1.25 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படாமல் விட்டுச் சென்றனர். பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டாலும், 6 ஆயிரத்து 218 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிதொழில்நுட்ப ஆய்வகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், அதிநவீன மென்பொருள்கள் உள்பட முழுமையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.