ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று (அக்டோபர் 12) காலை 8 மணி முதல் காத்திருக்கிறேன். பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அண்மையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் டி.பி.ஐ வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டும் போராட்டம் தொடர்ந்ததால் ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.13) போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, டிட்டோஜாக் குழுவில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க. அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன் ஆகியோர் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போராட்டத்தில் ஈடுபட உள்ள ஆசிரியர் சங்கங்களுடன் இன்று காலை 8 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் தனது முகாம் அலுவலகத்தில் இன்று காலை முதல் காத்திருந்தார். ஆனால், ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “நான் காலை 8 மணி முதல், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த காத்திருக்கிறேன். ஒவ்வொருவரையும் போன் செய்து அழைத்தோம். இதுவரை எப்போதாவது, அமைச்சர் கையெழுத்து போட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து காத்திருந்ததைப் பார்த்திருக்கிறீர்களா? ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று காலை 8.30 மணிக்கு வருவதாகச் சொல்லி இருந்தார்கள். ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அனைவரும் சேர்ந்து ஒருமித்த கருத்துடன் என்னை சந்திக்க வாருங்கள் என்று சொல்லி இருந்தேன். 9 மணி வரை யாரும் வரவில்லை. காத்திருந்துவிட்டு இப்போது தான் பள்ளி நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறேன்.
மாணவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதற்காக வந்திருக்கிறேன். இதை முடித்துவிட்டு மீண்டும் 10.30 மணி முதல் பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கிறேன். இன்று நாள் முழுவதும் காத்துக் கொண்டிருப்பேன். பேச்சுவார்த்தை நடத்த எனது அலுவலக கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்.” என்று கூறினார்.
போராட்டம் வாபஸ்
எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், எமிஸ் பதிவேற்ற பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
மேலும் அக்.13ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று (அக்.12) ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டிய நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.