பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில், கடலூர் மாவட்டம், குமராபுரம் கிருஷண்சாமி பொறியியல் கல்லூரி அரங்கத்தில் பள்ளி தலைமையாசிரியர்களுடனான மாநில அளவிலான அடைவுத் திறன் கூட்டம் புதன்கிழமை (06.08.2025) நடைபெற்றது.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்கி பயிலும் வண்ணம் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கென தனித்தனியான விடுதி வசதிகளுடன் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில், முதலமைச்சர் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதனை கடைகோடி மக்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.
தமிழக மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி உயர்தரமான கல்வியினை பயில வேண்டும் என்பதற்காகவும், மாணாக்கர்கள் கல்வி கற்பதற்கான சிறந்த சூழ்நிலைகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தியுள்ளார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்வதற்காக இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இல்லம் தேடி கல்வி திட்டத்தினை ஏற்படுத்தினார்கள்.
இத்திட்டத்தில் தன்னார்வலர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பள்ளி நேரத்திற்குப் பிறகு, அவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி கற்பித்து அவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டது.
எட்டு வயதுக்குட்பட்ட அனைத்து மாணவ, மாணவியரும் பொருள் புரிந்து படிக்கும் அளவிற்கு அடிப்படை எழுத்தறிவு திறனையும், எண்மதிப்பு அறிந்து அடிப்படை கணக்குகளைச் செய்யும் அளவிற்கு எண்ணறிவு திறனையும் பெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கில் “எண்ணும் எழுத்தும்” திட்டத்தினை 1 முதல் 3-ம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து 5-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
மணற்கேணி செயலி மூலம் நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை எளிமையான முறையில் டிஜிட்டல் வழியில் முப்பரிமாண வடிவத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக மிகச்சிறந்த முறையில் பயின்று வருகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களிடையே தலைமைப் பண்புகளை வளர்க்கும் நோக்கில் மகிழ் முற்றம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மாதிரி சட்டப்பேரவை போன்ற செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் ஆளுமைத் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு குறித்து ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில் 20 மாவட்டங்களில் நிறைவுசெய்து, இன்று 21-வது மாவட்டமாக கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 9,80,340 பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி முன்னேற்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாநில அளவிலான அடைவுத் தேர்வின் அறிக்கை பள்ளி வாரியாக தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் கடலூர் மாவட்டத்தினை பொறுத்தவரை விருத்தாசலம், மங்களூர், அண்ணாகிராமம், குமராட்சி, பரங்கிப்பேட்டை வட்டாரங்களை சேர்ந்த பள்ளிகள் முன்னிலையில் உள்ளது.
அடுத்த நிலையில் ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, கீரப்பாளையம், கம்மாபுரம் ஆகிய வட்டாரங்களும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய வட்டாரங்களாக கடலூர், காட்டுமன்னார்கோயில், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் முறையாக ஆசிரியர் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க ஒவ்வொரு ஆண்டும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாநில அளவிலான அடைவுத் (SLAS) தேர்வானது மாணவர்களுக்கு நடைபெறுகிறது.
இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுவதுடன், பள்ளி அளவிலும் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதனால் அப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், முன்னேற்றம் குறித்தும் தெரிந்துகொள்ளலாம். இத்தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள் மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுப்பதற்கு மாறாக புரிந்துகொண்டு படிக்கும் திறனை வளர்த்து கொள்ள முயல்கின்றனர். வினாக்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை அவர்களே தேடி ஆராயவும் கற்றுக்கொள்கின்றனர். மாணவர்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்த பயிற்சி வழங்கப்படுகிறது.
மேலும், இத்தேர்வில் மாணவர்கள் நல்ல முறையில் மதிப்பெண் பெறுவதற்காக ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பயிற்சி, சிறப்பு வகுப்புகள் குறித்து தலைமையாசிரியர்கள் எடுத்துரைத்தனர். கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டமானது 10ஆவது இடம் பிடித்து முந்தைய ஆண்டுகளை காட்டிலும் முன்னேற்றமடைந்துள்ளது.
அடுத்தவரும் தேர்வில் முதல் 5 இடங்களுக்குள் எடுக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமன்றி “கோடையில் கற்றல் கொண்டாட்டம்“ என அரசுப் பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறையினை பயனுள்ள வகையில் பல்வேறு திறன்களை வளர்த்திடும் வகையிலும், மற்ற மாவட்டத்திற்கு முன்னுதாரணமாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பாக மேற்கொண்டுள்ளார்.
தலைமையாசிரியர்கள் பள்ளி வளாகத்தினை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களுடன் அவ்வப்போது மாணவர்களின் கற்றல்திறன்களை மேம்படுத்துவது குறித்து ஆய்வுக்கூட்டங்கள் மேற்கொள்ள வேண்டும். தலைமையாசிரியர்கள் பள்ளிகளில் முறையாக வகுப்புகள் நடைபெறுவதை கண்காணித்திட வேண்டும். மேலும் தேவைக்கேற்ப வகுப்புகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் அரசுப் பள்ளியில் பயின்ற 193 மாணவர்கள் முதன்மை கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக சேர்ந்துள்ளனர். கடலூர் மாவட்டமானது மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வில் இரண்டாமிடம் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் முன்னெடுப்பே இந்நிலைக்கு சாத்தியமானது. அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியினை வழங்கிட தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயலாற்றிட வேண்டும்” என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், கடலூர்