தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மண்டலக்குழு தலைவருமான மதிவாணன் முன்னிலையில் 16-வது வார்டு மகளிர்க்கு இலவச அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்ட துவக்க விழா இன்று நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி 16-வது வார்டுக்கு உட்பட்ட மகளிர்க்கு இலவச அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அங்கு வசிக்கும் சுமார் ஆயிரம் மகளிருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் வைப்புத் தொகை செலுத்தி அன்றாடம் தங்களின் வரவுகளை சேமிக்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மகளிருக்கு சேமிப்பு வைப்பு தொகை அட்டையை வழங்கினார். மேலும், இந்நிகழ்வில் திருச்சி தலைமை அஞ்சலக முதுநிலை அதிகாரி ராஜ்குமார், துணை அஞ்சலக அதிகாரி சீனிவாசன் மற்றும் பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார், வட்டக் கழகச் செயலாளர்கள் தங்கவேலு, சண்முகம் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது; இந்த மேடையில் நாங்கள் அமர்வதற்கு காரணமான தாய்மார்களை வணங்குகிறேன். மேலும், தானும் இந்த 16-வது வார்டுக்கு உட்பட்டவன் என்ற முறையில் தனது மனைவி பெயரிலும் வங்கி கணக்கு புத்தகம் துவக்கி அதில் 100 ரூபாய் செலுத்தியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் இணைந்திருக்கும் நீங்கள் என்றும் அஞ்சலக சேமிப்பு திட்டத்தை கைவிடாமல் இதை தொடர வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனப் பேசினார்.
மேலும் டிசம்பர் 3-ம் தேதியான இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற விழாவில் 96 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37.52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிறப்பாக சேவையாற்றிய தொண்டு நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு அளித்த நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆரம்பநிலை பயிற்சி மையங்கள், சிறப்பு பள்ளிகள்,அறிவுசார் குறைபாடுடையோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் மனநல காப்பகங்களுக்கு கேடயங்களையும் இவ்விடங்களில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கி பாராட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“