தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேரீஸ்கார்னர் சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலம் முதல் மணிமண்டபம் ரவுண்டான வரை உள்ள பாலப்பகுதிகளை ஆய்வு செய்தார்.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்; “இந்தப் பாலத்தை ஏற்கெனவே இருக்கும் பாலத்துடன் சேர்த்து உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் பணிகளை முடித்து, பாலம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர் மாநகரின் முக்கிய மேம்பாலமாக இருக்கும் மேரீஸ் கார்னர் மேம்பாலம், முன்பே திட்டமிட்டபடி கட்டியிருக்க வேண்டும். ஆனால், பாலத்தின் மேற்குப் பகுதியில் குறைந்தளவே நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் நாஞ்சிக்கோட்டை சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ரயிலடிக்கு வந்து செல்வதில் சிரமம் நிலவுகிறது. மேலும், இந்தப் பாலத்தால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன.
இந்தப் பாலம் கட்டும்போதே குறைபாடுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தப் பாலத்தைக் கட்டும்போதே வந்து நேரில் ஆய்வு செய்தார்.
தற்போது இந்தப் பாலத்தை மணி மண்டபம் ரவுண்டான வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, பாலத்தை ஆய்வு செய்திருக்கிறோம்.
தஞ்சாவூர் பொதுமக்களுக்கு இந்தப் பாலம் அவசியமான ஒன்றாகும். இதை `கனவுத் திட்டம்’ என மேயர் சண்.ராமநாதன் கூறியிருக்கிறார். புதிய பாலத்தை ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் பாலத்தின் நடுப்பகுதியில் சேர்த்து, பாலத்தை நீட்டித்தால் பழைய பாலம் தாங்குமா என்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள்.
அதன் பின்னர் அரசிடம் திட்ட மதிப்பீடு தயார்செய்து நிதி பெறப்பட்டு, பாலத்தின் பணிகள் தொடங்கப்படும். இந்தப் பாலம் வரப்பிரசாதமாக அமையும்” எனத்தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/