திருவெறும்பூர் அருகே உள்ள பெல் ஊரக பகுதியில் இருந்து சென்னைக்கு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் வகையில் புதிய பேருந்து வழிதடத்தை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கானோர் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பிற ஊர்களிலிருந்தும் வந்து வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் எளிதாக சென்னைக்கு சென்று வரும் வகையில் பெல் ஊரகப்பகுதியில் இருந்து சென்னை கிளம்பாக்கத்திற்கு நேரடியாக அரசு பேருந்து போக்குவரத்து இயக்க வேண்டுமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்றத்தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து புதிய வழித்தடத்தில் சென்னை கிளாம்பக்கத்திற்கு பேருந்து தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெல் ஊரகப் பகுதியில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு புதிய வழித்தடத்தில் பேருந்தை தொடங்கி வைத்தார்.
இந்த பேருந்தானது நாள்தோறும் இரவு 10 மணிக்கு பெல் டவுன்ஷிப்பில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு புறப்படும். அதே போல் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மறுநாள் காலை 9 மணிக்கு புறப்பட்டு மாலை 4.55 மணிக்கு பெல் டவுன்ஷிப் வந்தடையும். இந்த விழாவில் தொழிற்சங்க பிரதிநிதிகள், போக்குவரத்து கழக அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திருவெறும்பூர் அருகே உள்ள பிரபல பெல் தொழிற்சாலை டவுன்ஷிப் பகுதியில் இருந்து பல ஆண்டுகளாக சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்து சேவை கொரோனா கால கட்டத்திற்குப்பிறகு இயக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து மீண்டும் வழக்கம்போல் சென்னைக்கு பேருந்தினை இயக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையின் அடிப்படையில் மீண்டும் பெல் டவுன்ஷிப் பகுதியில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்