“கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களிடம் ஆளுநர் பரிசோதித்து கொள்ளட்டும்” என்று மாநில பாடத்திட்ட குறித்து விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2021-ம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், தி.மு.க அரசுக்கும் பல விஷயங்களில் ஏழாம் பொருத்தம்தான். தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அனுப்பாமல் வைத்திருப்பது, திராவிட இயக்க சித்தாந்தத்தை விமர்சிப்பது, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழக அரசுடன் முரண் என பல விவகாரங்களில் தி.மு.க அரசுடன் மோதல் போக்கு தொடர்கிறது.
ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துகளுக்கு ஆளும் தி.மு.க-வின் அத்கிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அண்மையில்கூட, ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, நாட்டில் தோன்றிய பல்வேறு பிரிவினை சித்தாந்தங்களுள் திராவிட சித்தாந்தமும் ஒன்று என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னையில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, “தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது. பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடினேன். மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்” என்று பேசினார்.
தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என்று ஆளுநர் ஆர்.என். ரவி மாநில பாடத் திட்டம் குறித்து விமர்சித்துப் பேசியது, சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்வினைகளைத் தூண்டியது.
இந்நிலையில், மாநில பாடத் திட்டத்தை விமர்சித்துப் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துப் பேசியுள்ளார்.
மாநில பாடத் திட்டம் குறித்த ஆளுநரின் ஆர்.என். ரவியின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களிடம் ஆளுநர் பரிசோதித்து கொள்ளட்டும். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை விட தமிழக பாடத்திட்டம் சிறப்பாக உள்ளது.
போட்டித் தேர்வுகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர்” என்று பதிலளித்துள்ளார்.
மாநில பாடத் திட்டம் குறித்த ஆளுநரின் ஆர்.என். ரவியின் கருத்துக்கு மதுரை எம்.பி சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த சு. வெங்கடேசன் பதிலடி கொடுத்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். இரவி கூறியுள்ளார்.
புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை.
தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு.” என்று விமர்சித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.