மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் நிலைப்பாட்டிற்கு முரணான வகையில், பள்ளிக் கல்வி தொடர்பான கொள்கையை ஏற்கும் தமிழக அரசின் முன்மொழிவு, மாநிலத்தில் உள்ள கூட்டணி கட்சிகளையும் கல்வியாளர்களையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.
அண்மையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேசிய கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்களை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார். அப்போது அவர் தேசியக் கல்விக் கொள்கை குறித்து கூறியதாவது: “தேசியக் கல்விக் கொள்கையில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் ஒட்டியதா என்று கேட்டீர்கள். எந்தெந்த திட்டங்களில் நம்முடைய மாணவச் செல்வங்களுக்கு பயனுள்ளதாக இருகிறதோ, நம்முடைய கல்விக்கு பயனுள்ளதாக இருக்கின்றதோ அதை செய்ய வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையில் அவர்கள் என்ன நுழைக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லை. அதை வராமல் செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய கடமையாக இருக்கும். அதனால், அதில் இருக்கின்ற நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு நாங்கள் கண்டிப்பாக செய்வோம்” என்று கூறினார். இருப்பினும், தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தற்போது மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது புதிய தேசியக் கல்விக் கொளையை கடுமையாக எதிர்த்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகும், தேசியக் கல்விக் கொளையை எதிர்க்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறிவருகிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கை 3வது மொழியாக இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறது என்று தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் பலமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழலில்தான், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்லதை எடுத்துக்கொள்வோம் என்று கூறியிருப்பது, தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்த கூட்டணி கட்சிகளையும் புதிய தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்த கல்வியாளர்களையும் கேள்வி எழுப்பச் செய்துள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்கள் என்ன என்பதை சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், தேசிய கல்விக் கொள்கையின் நல்ல அம்சமாக, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பொது மதிப்பீட்டுத் தேர்வின் முன்மொழிவதாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
தேசிய கல்விக் கொள்கையில் முக்கியமான மற்றும் அவசியமான அம்சமாக குறிப்பிடப்படும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்களை கற்பிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’ என்ற பெயரில் விரைவில் செயல்படுத்தப்படும். இது ஆசிரியரின் திறனை வலுப்படுத்துவதாக இருக்கும். அது மாநிலத்திலும் செய்யபட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
இருப்பினும், தேசிய கல்விக் கொளையில் (NEP) உள்ள ‘நல்ல அம்சங்கள்’ முழுமையாக அளிக்கப்படவில்லை. இன்னும் அதிகாரிகள் அதைப் பற்றி விவாதித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
பொதுப் பள்ளி முறைக்கான மாநில மேடை - தமிழ்நாடு பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, தேசிய கல்விக் கொள்கையில் எது நல்லது எது கெட்டது என்பதை அரசாங்கம் தெளிவாகக் கூற வேண்டும் என்றார். “ஒரு கொள்கை வழிகாட்டுதல் இல்லாத எந்த திட்டமும் குழப்பத்திற்கே இட்டுச் செல்லும். சமூக நீதிக் கொள்கைகளின் அடிப்படையிலான கல்விக்கான தொலைநோக்கு பார்வையே காலத்தின் தேவை” என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்லதை எடுத்துக்கொள்வோம் என்று கூறியது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை செயல்படுத்துவதற்கு முன் தேசியக் கல்வி கொள்கையில் உள்ள ‘நல்ல அம்சங்களின்’ பட்டியலை அமைச்சர் வெளியிட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவதால் அனைத்து மாணவர்களும் பயனடையும் விதமாக இருக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.