“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்தை நீக்கிவிடுவோம் என்று சீமான் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய நிலையில், “நான் தமிழர், அவர் தமிழரா? திராவிட நாடு எங்கே இருந்தது என்று என்னோடு விவாதிக்கத் தயாரா?” என்று சீமான் கேட்டுள்ளார்.
பள்ளிகல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 34 ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள் என 54 ஆசிரியர்கள் அக்.23-ம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்டு ஃபிரான்ஸ் செல்கின்றனர். அக்.28-ம் தேதி வரை ஃபிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாவது: கனவு ஆசிரியர் திட்டத்தில் தேர்வான ஆசிரியர்களை பாரீஸ்க்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம்.
ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் முதன் முறையாக வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம். பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரி செய்யும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதேபோல பள்ளிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளிட்டோரையும் கண்டறிந்து அவர்களுக்கும் முறையாக கல்வி வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டு அரசியலே கல்வியில்தான் இருக்கிறது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனையாக இருக்கிறது. பாராட்டுவதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் தமிழ் மொழியில் பேசும் அவர் இப்படி சொல்வது வேதனைக்குரியது. கல்வி மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோத்தாரி குழுமம் பரிந்துரை செய்துள்ளதை காட்டிலுமே கூடுதலான நிதி ஒதுக்கி வருகிறோம்.
ஆட்சிக்கு வந்தபோது, ரூ.32 ஆயிரம் கோடியில் ஆரம்பித்து தற்போது ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்கிறோம். கடந்த ஆண்டுகளை காட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் கல்வி மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்நிலையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்தை நீக்கிவிடுவோம் என்று சீமான் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய நிலையில், “நான் தமிழர், அவர் தமிழரா? திராவிட நாடு எங்கே இருந்தது என்று என்னோடு விவாதிக்கத் தயாரா?” என்று சீமான் கேட்டுள்ளார்.
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்தை நீக்கிவிடுவோம் என்று சீமான் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியது குறித்து, நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதற்கு ஆவேசமாக பதிலளித்த சீமான், “நான் தமிழர், அவர் தமிழரா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், அவர் தமிழர் என்றால், திராவிட நாடு என்பதை எப்படி ஏற்கிறார், திராவிடங்களின் வேலையே திரித்து திரித்து பேச்சுவதுதான். நான் என்ன சொன்னேன் என்பதை விளங்கிக்கொண்டீர்களா? நான் என்ன சொன்னேன் என்றால், நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, எப்படி ஆட்சி செய்வேன் என்று ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறோம். அதில் என்ன சொல்லியிருக்கிறேன் என்றால், நான் வந்தால், இந்த தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்கிருவேன், வேறு தமிழ்த்தாய் வாழ்த்தைப் போடுவேன்.” என்று கூறியுள்ளேன். தமிழ்நாட்டில் என்ன திராவிடநல் திருநாடு வேண்டி கிடக்கிறது. திராவிட நாடு என்றால், அதன் எல்லை எங்கே இருக்கிறது? தமிழர் நாட்டில் திராவிடம் எங்கே இருக்கிறது? இது திராவிட நாடா, தமிழ்நாடா சொல்லுங்கள். நமது இலக்கியத்தில் எந்த இடத்தில், திராவிட நாடு இருக்கிறது, தமிழன் இல்லாதவர்கள் வசதியாக ஆள்வதற்கு கொண்டுவந்து வைத்துக்கொண்டு திராவிடம் என்று என்னை ஏற்றுக்கொள் ஏற்றுக்கொள் என்றால் எப்படி, அன்பில் மகேஸ் என்னோடு பேசத் தயாராக இருக்கிறாரா? இரண்டு பேரும் ஒரு இடத்தில் உக்காந்து பேசுவோமா? நீங்கதானே கல்வித்துறை அமைச்சர் வா உக்காந்து பேசுவோம். நான் தமிழன், அதனால்தான் இந்த தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்குவேன் என்கிறேன். தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்று சொல்லவில்லை, இது தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்காது என்று சொல்கிறேன். எனக்கு என்ன திராவிடத் திருநாடு வேண்டிகிடக்கிறது. எங்கள் தமிழை வாழ்த்தி பாடிய எங்கள் பாவலர்களே இல்லையா? புரட்சி தமிழன் பாரதிதாசன் கிட்ட பாட்டு இல்லையா? அந்த பாட்டை எடுத்து வைக்க முடியாதா? வைத்துக் காட்டுகிறேன் பாருங்கள், எப்படிப்பட்ட பாட்டை தமிழ்த்தாய் வாழ்த்தாக வைக்கிறேன் பாருங்கள். இங்கென்ன திராவிடம் கிடக்கிறது. தமிழ் எங்கள் இனம், தமிழ் எங்கள் மொழி.’ என்று ஆவேசமாகப் பேசினார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.