தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க சுற்றறிகை அனுப்பிய பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனரை தற்காலிக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டில் மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதில் உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது, 9,10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறு வருகிறது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி. காலை முதல் மாலை வழக்கம்போல பள்ளிகள் இயங்கும்.
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி" என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 2 நாளைக்கு முன்பு தொடங்கி வைத்தார். இந்த திட்டம் கொண்டு வரப்பட முக்கிய காரணம், கொரோனா பரவல் சார்ந்த பொதுமுடக்க காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சித்தாந்த ரீதியாக கொள்கை கொண்ட தன்னார்வலர்களை இல்லம் தேடி கல்வி திட்டத்தில் அனுமதிக்கமாட்டோம். பதிவு செய்யும் தன்னார்வலர்களின் பின்புலம் முழுமையாக ஆராய்ந்த பிறகே இந்த திட்டத்தில் அனுமதிப்போம். அதையும் மீறி யாரேனும் பதிவு செய்தால் அவர்கள் திட்டத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட மாட்டாது.
புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. புதிய கல்விகொள்கை திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆசிரியர்களின் விவரங்களை கோரி மத்திய அரசு அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் அளித்ததோடு ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர் அமுதவல்லியை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றறிக்கையை திரும்ப பெற்றுள்ளோம். தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதில் உறுதியாகவுள்ளோம். இணை இயக்குனர் இணை இயக்குனரின் செயல் எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. இனிமேல், எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் ஆலோசிக்காமல் பதில் அளிக்ககூடாது என்பதை கல்வித்துறை அதிகாரிகளுக்கு கூறியுள்ளோம்.
இணை இயக்குனர் யாரையும் ஆலோசிக்காமல் சுற்றறிக்கை அனுப்பியது வருத்ததற்குரியது. இது தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளோம். இல்லம் தேடி கல்வித் திட்டத்திம் குறித்து உரிய விளக்கமளித்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி காலை முதல் மாலை வழக்கம்போல பள்ளிகள் இயங்கும்.. வகுப்புகள் மாணவர்களை பள்ளிகளுக்கு கட்டாயமாக வர வேண்டும் தனியார் பள்ளிகள் வற்புறுத்தக்கூடாது. உரிய பாதுகாப்புடன் மாணவர்களை வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் சேவையாற்ற பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும், இதுவரை 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.