இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இறைவனிடம் கையேந்துங்கள் என்று உருக்கமாகப் பாட்டு பாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு ரமலான் வாழ்த்துகள் தெரிவித்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, திருச்சி (கி) மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன், இஸ்லாமிய பெருமக்களும் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
'இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் திராவிட இயக்கத்தின் மரபு 1920-களில் தொடங்கி இன்று வரையிலும் தொடர்கிறது.
இறைவனிடம் கையேந்துங்கள்…, அவர் இல்லையென்று சொல்லுவதில்லை. பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள், அவர் பொக்கிஷத்தை மூடுவதில்லை' என்று பாடிய குரல்தான், 'அழைக்கிறார் அண்ணா அழைக்கிறார்…', இந்தக் குரல்தான், 'ஓடி வருகிறான் உதயசூரியன்'… 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே…' எனும் திராவிட குரலாகவும் ஒலித்தது.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வருகிறோம் என்று சொல்லி அடுத்தவர் வீட்டுக்குள் ஏன் சார் எட்டிப்பார்க்கீறீர்கள்?'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாஜகவினருக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும், அவர் பேசுகையில்; மந்திரம், தந்திரத்திற்கு ஆளாகாத மார்க்கத்தை கொண்டவர்கள்தான் இஸ்லாமியர்கள் என சொன்னவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
பாரம்பரியத்தை விடாமல் பின்தொடர்பவர்கள் இஸ்லாமியர்கள் என சொன்னவர் பேரறிஞர் அண்ணா,வக்பு வாரிய மசோதாவை 115 முறை திருத்தியுள்ளது மத்திய அரசு. இதில் ஏன் மத்திய அரசு இவ்வளவு அக்கரை காட்டுகிறது? அதில் இவர்களுக்கு என்ன கவலை.
அதில் அக்கறை காட்ட. தேவையில்லை என சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்தவர் நம் தமிழக முதலமைச்சர்.
இறைவனிடம் துவா கேட்கும் உங்களிடம் நாங்கள் துவா கேட்கிறோம். உங்களின் தூய்மையான வாக்குகளை கேட்கிறோம், தமிழக முதலமைச்சர் நலமுடன் வாழ வேண்டும் என உங்களிடம் துவா கேட்கிறோம் எனப் பேசினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்