சமக்ரா ஷிக்ஷா (Samagra Shiksha) திட்டத்திற்கு 2024-25 ஆம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய நிதியில் முதல் தவணை கூட தமிழகத்திற்கு வழங்கவில்லை எனக் கூறி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டிருந்தார். மேலும், அது தொடர்பான மத்திய அரசின் தரவுகளைக் கொண்டு அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தனது அறிக்கை குறித்த விளக்கத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, "பி.எம் ஸ்ரீ திட்டம் குறித்து நான் வெளியிட்ட அறிக்கை, மத்திய அரசின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது தான். குறிப்பிட்ட மாநிலங்களுக்கு, முதல் தவணை நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சில மாநிலங்களுக்கு இரண்டாம் தவணை நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சில மாநிலங்களுக்கு ஒரு தவணை நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான முழு விளக்கத்தையும் எனது அறிக்கையில் நான் குறிப்பிட்டிருந்தேன். மத்திய அரசிடமிருந்து இந்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். நம் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதி குறித்து தான் வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு வர வேண்டிய நிதியை வழங்காதது குறித்து பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்புவதில்லை. மத்திய அரசின் இந்த செயலால், 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
பி.எம் ஸ்ரீ-யை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நிர்பந்திக்கப்படுகிறோம். தேசிய கல்வி கொள்கை சார்ந்த அனைத்து விவகாரங்களையும் பி.எம் ஸ்ரீ திட்டத்தில் ஒருங்கிணைத்துள்ளனர். இந்த திட்டத்தில் அரசியல் செய்யாமல், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயலாற்ற வேண்டும் என்று தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தான் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் உண்மை தானா என்பதை சரிபார்த்துக் கொள்வது அவசியம். நாங்கள் என்ன திட்டங்களை எல்லாம் செய்து முடித்திருக்கிறோம் என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். ஆனால், தமிழகத்திற்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு துணை போகும் வகையில் தான் அண்ணாமலையின் செயல்பாடுகள் இருக்கின்றன.
மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை சரியான நேரத்தில் விடுவிக்காததால், தமிழக அரசுக்கு தேவையில்லாத நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது" எனக் கூறினார்.