/indian-express-tamil/media/media_files/2025/06/14/EA6OcrTtFIwkGS71A7Ni.jpg)
தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் 4-வது மாநில மாநாடு திருச்சி புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய அவர், "தமிழ்நாட்டை பொருத்தவரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நிகராக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம் மின்வாரியம் தான். இன்றைக்குத் தொழில்துறையில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழும் தமிழ்நாடு, மின்வாகனம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல பிரிவுகளிலும், உற்பத்தி துறைகளிலும் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் உற்பத்தியாகும் இருசக்கர மின்சார வாகனங்களில் 70% தமிழ்நாட்டிலேயே உற்பத்தி ஆகின்றன. இந்த சாதனைகளில் மின்சார வாரியப் பணியாளர்களின் உழைப்பு பெருமளவில் கலந்து இருக்கிறது. எப்போதும் போற்றுதலுக்குரிய உழைப்பு மின்வாரியத் தொழிலாளர்களின் உழைப்பு. கடந்த காலங்களில் எல்லாம் பேரிடர் நேரத்தில் மின்விநியோகம் தடைபட்டால், மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை மின்சாரம் இல்லாமல் பொழுதைக் கழிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், இன்றைக்கு அப்படி இல்லை. எத்தகைய பேரிடராக இருந்தாலும் சரி, உடனுக்குடன் மின்விநியோகம் சீர் செய்யப்படுகிறது. அந்த அளவிற்கு நமது மின்வாரியத்தில் பொறியாளர்கள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டும். சில நேரங்களில் பெருமழை காலங்களில் கூட தனி ஆளாக மின்கம்பங்களில் ஏறி மின் இணைப்பைச் சரிசெய்வார்கள். இது போன்ற பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவும். நீங்கள் எல்லோரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் அதே நேரத்தில் உங்களிடம் ஒரு வேண்டுகோளையும் முன் வைக்கின்றேன். எதுவாக இருந்தாலும் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதுதான் முதன்மையாக இருக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
இந்தியாவின் எந்த மாநிலமும் நினைத்துப் பார்க்காத வகையில் 1974 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்புகளை வழங்கி மகத்தான சாதனையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படைத்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு சலுகை விலையில் மின்சாரம், வலுவான மின்விநியோகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த நான்காண்டுகளில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 900 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் 1 லட்சத்து 82 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திற்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நம் முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
"அத்தகைய மின்சார வாரியத்தை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் தான் தேவைக்கேற்ப காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்ற அறிவிப்பை நம்முடைய திராவிட மாடல் அரசு வெளியிட்டு இருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, மின்விநியோகத்தை எப்படியாவது தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கொடுக்கப்படும் அழுத்தங்களை எல்லாம் முறியடித்துக் கொண்டிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின். அவரது தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். தனியார்மயத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்" எனக் கூறினார்.
க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.