திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில், ‘தமிழக வரலாற்றில் பெண்கள்’ என்றத் தலைப்பில் நிகழாண்டுக்கான ‘திருச்சி புத்தகத் திருவிழா’ மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நேற்று இரவு தொடங்கியது. தொடர்ந்து அக்.6-ம் தேதி வரை 10 நாட்கள் இந்த புத்தகத் திருவிழா நடக்கிறது.
புத்தக விழாவில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமை வகித்து பேசியதாவது; “திருச்சியில் புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டு 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். நிகழாண்டு புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் திருச்சியை சேர்ந்த முக்கிய ஆளுமைகள் பாராட்டு பெறுவார்கள். சிறார்களுக்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடக்கும். புத்தகங்கள் பலரது வாழ்க்கையை மாற்றக்கூடிய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது.
என் வாழ்வில், ராபின் சர்மா எழுதிய ‘ஹூ வில் கிரை வென் யூ டை’ என்ற புத்தகம் பல மாற்றங்களை கொண்டு வந்தது. ‘நாம் இறக்கும்போது யார் நமக்காக அழுவார்கள்’ என புத்தகத் தலைப்பு விநோதமாக இருந்தாலும், புத்தகத்தின் கரு என்பது நம் வாழ்வியலோடொன்றி ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
வளர்ந்த நாடுகள் சைலண்ட் சொசைட்டி என்பதை நோக்கி பயணிக்கிறது. அடுத்தத் தலைமுறையினர் குனிந்த தலை நிமிராமல் போனையே பார்த்துக் கொண்டிருப்பர். பக்கத்தில் யார் இருந்தாலும் பேச மாட்டார்கள். தயக்கம் இருக்கும். சைலண்ட் சொசைட்டி மிகவும் அபாயகரமானது. உறவுப்பாலத்தை அமைக்கவோ, உணர்வுப்பூர்வமான ஆதரவையோ தர முடியாது. ஜப்பானில் இந்த நிலையை நோக்கி பயணித்துவிட்டது. இந்தியாவையும் அடுத்த சைலண்ட் சொசைட்டியாக மாற்ற விரும்பவில்லை. ஒரு மாணவன் மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை சொல்லிக் கொடுங்கள்.
எவ்வளவு தான் திறன்கள் இருந்தாலும், அடுத்தவர்களிடம் பேசத்தெரியாத மாணவன் ஒரு தலைமைப் பண்பையோ, நிர்வாகப் பொறுப்பையோ வகிக்க முடியாது. அனைவரிடமும் பழக பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். வாழ்க்கை என்பது நமது நினைவுகள் தான் வாழ்க்கை. வயதான காலத்தில் நம் நினைவுகள் நமக்குச் சொல்லித் தரும். நாம் இறக்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் என பல விஷயங்கள் குறித்து ராபின் சர்மா எழுதிய அந்தப் புத்தகம் பேசும்.
அதுபோன்று இங்கு லட்சக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகத்தின் ஒரு பக்கத்தை திருப்பும்போது வாழ்க்கையில் ஒரு நாளை மறந்து அடுத்த பரிணாமத்தை அடைகிறீர்கள் என்று அர்த்தம். புத்தகம் வாசிப்பின் மூலம் தனி மனிதனின் பாத்திரத்தை நாம் கண்டறிய முடியும்" எனப் பேசினார்.
புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது, “பள்ளி மாணவர்கள் காலாண்டு விடுமுறையை பயனுள்ள வகையில் இந்த புத்தகத் திருவிழாவில் செலவிட வேண்டும். நம் அறிவுப் பசியை தீர்த்துக் கொள்வதற்காக புத்தகங்களுக்கான ‘பஃபே சிஸ்டம்’ இது.
ஒவ்வொரு அரங்கையும் பார்த்து புத்தகங்களை தேர்ந்தெடுங்கள். வாசிப்பு பழக்கம் மிக முக்கியமானது. படிக்க படிக்க புது சிந்தனைகள் வரும். ஒவ்வொரு கருத்தையும் புதிதாக பார்க்கலாம். நம் வாழ்வின் தேவைகளுக்கு அடுத்தப்படியாக நல்ல புத்தகத்துக்கு நாம் முக்கியத்துவம் தரவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பாட சாலை அமைந்தால் நாட்டின் நிலை முன்னேறும் என்று அண்ணா தெரிவித்துள்ளார். வாசிக்கலாம் வாங்க என்று புத்தகம் சொல்கிறது. ‘வா’, ‘சிக்கலாம்’ என்று செல்போன் சொல்கிறது. செல்போன் பார்ப்பதை தவிர்த்து புத்தகத்தை அதிகம் வாசிக்க வேண்டும்.
‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் லைப்ரரி’ என்ற திட்டம் மூலம், மருத்துவமனையில், வயதானவர்களும் போன் செய்து புத்தகங்களை பெற முடியும். உலக அறிவை வளர்த்துக் கொள்ள இதுபோன்ற புத்தகத்திருவிழா நடத்தப்படுகிறது. புத்தக்தை காதலிக்கும் வகையில் ஒரு குழந்தையை கொண்டு செல்லவது எப்படியென்றால், குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு புத்தகத்தை 10 முதல் 15 நிமிடங்கள் வாசிக்கத் தொடங்கினால், அந்த குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் ஆர்வம் வந்துவிடும் என யுனிசெப் ஆய்வு கட்டுரை சொல்கிறது. எனவே குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை கொண்டு வாருங்கள்" என்றார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னையிலிருந்து காணொலி மூலம் பேசும்போது, “தமிழக முதல்வர் வழிகாட்டுதல்படி இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் புத்தகத் திருவிழா சிறப்பாக தமிழகத்தில் நடக்கிறது. திருச்சியின் 3வது புத்தகத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒரு கலை நாளாக கொண்டாடப்படுவது பாராட்டுக்குரியது.
கல்லூரி மாணவர்கள் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
விழாவில், திருச்சியின் முக்கிய தமிழ் ஆர்வலர்களான ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர்கள், முனைவர்கள் ராஜகோபாலன், அந்தோணி குரூஸ், கல்வியாளர் சவுமா ராஜரத்தினம், டாக்டர் எம்.ஏ.அலீம் ஆகியோர் பாராட்டப்பட்டனர். மாவட்ட நூலர் சிவக்குமார், கவிஞர் நந்தலாலா, திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் வீ.கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜலட்சுமி வரவேற்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.