திருச்சியில் அறிவுசார் நூலகம் அமைக்க முதல்வரிடம் பரிந்துரைப்பேன்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி
டெல்டா மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்திலும் அறிவுசார் நூலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைக்க உள்ளேன்
திருச்சி மாவட்ட மைய நூலக கூட்ட அரங்கில் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற உலக புத்தக தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி, கொடையாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட மைய நூலக வளாகத்தில் நடைபெற்றது.
Advertisment
இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
இதுகுறித்த விபரம் வருமாறு;
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற உலக புத்தக தினவிழா நிகழ்வில் 2022-ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்ட திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட 5 நூல்களான “திருச்சிராப்பள்ளி ஊரும் வரலாறும்” என்ற நூலின் ஆசிரியர் கவிஞர் நந்தலாலா, “மௌனம் பேசும் கடல் அலைகள்” என்ற நூலின் ஆசிரியர் தமிழினியன், “இந்திய விடுதலைப் போரில் தமிழகம்” என்ற நூலின் ஆசிரியர் திருக்குறள் சு.முருகானந்தம், “வாருங்கள் வெல்வோம்” என்ற நூலின் ஆசிரியர் அருணா ஹரிதை,“முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்ற நூலின் ஆசிரியர் முனைவர்.திருக்குறள் தாமரை ஆகியோருக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
மேலும், உலகப் புத்தக தின விழாவில் “புத்தகம் என்ன செய்யும்” என்ற தலைப்பில் வாசகம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற வாசகர்களுக்கு கேடயங்களையும், தேசிய வருவாய் வழி திறனறித் தேர்விற்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட மைய நூலக இரண்டாவது தளத்தில் திருச்சி ரவுண்ட் டேபிள் அமைப்பினரால் நன்கொடையாக ரூ.5 லட்சம் மதிப்பில் படிக்கும் கூடம் கட்டப்பட்டதற்காக, திருச்சிராப்பள்ளி ரவுண்ட் டேபிள் அமைப்பினர்கள், நன்கொடையாளர்கள், புரவலர்கள் மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்; 'மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். டெல்டா மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்திலும் அறிவுசார் நூலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைக்க உள்ளேன்.
அதுபோன்ற நூலகம் அமைக்கப்பட்டால் மிகப்பெரிய பெருமையை பெற்றுள்ள திருச்சி மாவட்டத்தின் மகுடத்தில் வைரக்கல் பதித்ததுபோல் அமையும்' என்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட மைய நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார், மண்டல தலைவர் மதிவாணன், வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் நன்மாறன், ஆலோசகர் முனைவர் அருணாச்சலம், இணைச் செயலாளர் இலால்குடி முருகானந்தம், ரௌண்ட் டேபிள் நிர்வாகிகள் டாக்டர் ராஜவேல், சிதம்பரம், கலா சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“