ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தேர்தலில் ஏதாவது ஆகிவிட்டால், துணை ஜனாதிபதி பதவி தருவார்கள் என tதமிழிசை நினைக்கிறார் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மகளான தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ.க-வில் இணைந்த குறுகிய காலத்திலேயே, அவருக்கு தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் பதவி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக இருந்த 2019-ம் ஆண்டு செப்டம்பரில் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த 2021-ம் ஆண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது.
தெலங்கா ஆளுநராகவும் புதுச்சேரி துணை ஆளுநராகவும் இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜன், அரசியல் ரீதியாக கருத்துகளைத் தெரிவித்து வந்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழிசை சௌந்தராஜன் அரசியல் பேசுவதாக இருந்தால், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து பேசட்டும் என்று விமர்சித்து கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சூழலில், தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்த மக்களைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் தனது தெலங்கானா ஆளுநர் பதவி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பினார்.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன், இந்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் தென் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி அல்லது புதுசேரி என ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழிசை சௌந்தரராஜன், 2009 மக்களவை தேர்தலில் வடசென்னை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார். அவர் 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழக பா.ஜ.க தலைவராக பதவி வகித்த காலத்தில், 2016 சட்டமன்றத் தேர்தலிலும், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தமிழிசை தோல்வி அடைந்தார்.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன், இந்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க சார்பில் போட்டியிட உள்ளது குறித்து கருத்து தெரிவித்த தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “தேர்தலில் ஏதாவது ஆகிவிட்டால் துணை ஜனாதிபதி பதவி தருவார்கள் என தமிழிசை நினைக்கிறார்; தமிழிசை விஷயம் தெரியாமல் களத்தில் இருக்கிறார்” என்று விமர்சனம் செய்துள்ளார்.
சுவாமிதோப்பில் திங்கள்கிழமை சாமி தரிசனம் செய்த பின்னர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தேர்தலில் ஏதாவது ஆகிவிட்டால் குடியரசு துணைத் தலைவர் பதவி தருவார்கள் என தமிழிசை நினைக்கிறார். தமிழிசை விஷயம் தெரியாமல் களத்தில் இருக்கிறார். தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் நபர்கள் டெபாசிட் இழக்க வேண்டிக்கொண்டேன்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“