1998 கலவரம் தொடர்பான வழக்கில் 3 ஆண்டு சிறைதண்டனை பெற்றுள்ள பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் அவர் வகித்து வந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையை, செங்கோட்டையன் அல்லது சேவூர் ராமச்சந்திரனுக்கு ஒதுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் கோரிக்கையை ஏற்று, 3 ஆண்டு சிறைத் தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. நாளை, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளார்.
1998ல் ஓசூரில் நடந்த மதுவுக்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
குற்றம்சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள பாலகிருஷ்ண ரெட்டி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் பதவி இழக்க நேரிடும். மேல்முறையீட்டில் தண்டனை உறுதியானால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கோரிக்கை வைத்த நிலையில், அதையேற்று தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அதற்குள் மேல்முறையீடு செய்ய நீதிபதி அவகாசம் அளித்தார்.
தற்போது, மேல்முறையீடு செய்யவே, 30 நாட்கள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை பெற்றதால் அவரின் அமைச்சர் பதவி பறிபோனதோடு எம்எல்ஏ பதவியையும் இழந்து விடுகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "20 வருடங்களுக்கு முன்பு 1998ல் திமுக ஆட்சியின் போது விஷச் சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்தார்கள். அது தொடர்பாக நடந்த கல் வீச்சு சம்பவம் மீது தொடரப்பட்ட வழக்கு இது.. அவ்வளவு தான். நாளை ஐகோர்ட்டில் நான் அப்பீல் செய்ய உள்ளேன்" என்றார்.
ஒருவேளை, சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்தாலோ, அல்லது ரத்து செய்தாலோ பாலகிருஷ்ணன் ரெட்டி அமைச்சர் பதவியைத் தொடரலாம். இல்லையெனில், அவர் எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தை இழக்க நேரிடும். அத்துடன் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். அப்படி அறிவிக்கப்பட்டால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதி 21-ஆக அதிகரிக்கும்.