அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 21/2 மாதங்களில் ரூ56 லட்சம் லஞ்சம் : குட்கா ஊழலில் திடுக்

குட்கா விவகாரத்தில் இரண்டரை மாதங்களில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 56 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்திருக்கிறது.

குட்கா விவகாரத்தில் இரண்டரை மாதங்களில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 56 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்திருக்கிறது.

குட்கா ஊழல், தமிழகத்தை உலுக்கி வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை செய்தார். ஆனாலும் கடைகளில் அவற்றின் விற்பனையை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் லஞ்சமும் வரி ஏய்ப்பும் நடப்பதாக மத்திய அரசின் வருமான வரித்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.

குட்கா நிறுவனங்களின் குடோன்களில் 2016 ஜூலை 8-ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது ஒரு குட்கா நிறுவனத்தின் பெண் கணக்காளரிடம் இருந்து, குறிப்பு நோட்டு ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் தமிழக அமைச்சர் ஒருவருக்கும், போலீஸ் உயர் அதிகாரிகள் இருவர் உள்பட பலருக்கும் மொத்தம் 39.91 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. அதாவது சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்காக இந்தத் தொகையை மேற்படி நிறுவனம் வழங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக பதவி வகித்தவர் டி.கே.ராஜேந்திரன். அவருக்கு ஓய்வுக்கு பிறகும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தொழிற்சங்க வாதியான கதிரேசன், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் குட்கா ஊழலை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஊழல் கண்காணிப்பு ஆணையரான ஜெயகொடி விசாரிப்பார் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அண்மையில் ஜெயகொடி அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, மோகன் பியாரே என்கிற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையேதான் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு, திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்தும் திமுக தரப்பில் நீதிமன்றத்தை அணுகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

குட்கா விவகாரத்தில் வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த பதில் மனுவில் வருமான வரித்துறை (புலனாய்வு) முதன்மை இயக்குனர் சுசி பாபு வர்கீஸ் கூறியிருக்கும் தகவல்கள் வருமாறு:

‘குட்கா சோதனை தொடர்பாக 11-8-2016 தேதியிட்ட கடிதம் ஒன்றை வருமான வரித்துறை சார்பில் தலைமைச் செயலாளருக்கும், டிஜிபி.க்கும் வழங்கினோம். அந்தக் கடிதத்துடன் குட்கா சோதனையில் கிடைத்த பொருட்கள் தொடர்பான ஆவணங்கள், வாக்குமூலங்கள் ஆகியவற்றை இணைத்திருந்தோம்.

குட்கா வணிக பங்குதாரரான மாதவராவ் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் மாநில அரசுடன் தொடர்புடைய பலருக்கு வழங்கப்பட்ட தொகை குறித்த தகவல்களையும், அவை நடவடிக்கைக்கு தகுதியான ஆவணங்கள் என்பதையும் குறிப்பிட்டோம். மாதவராவ் தனது வாக்குமூலத்தில் பல்வேறு அதிகாரிகளுக்கு பணம் வழங்கியதை குறிப்பிட்டிருக்கிறார். தங்கள் குறிப்பில் ‘ஹெச்.எம்.’ என குறிப்பிட்டது ஹெல்த் மினிஸ்டரையும்(சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்), ‘சி.பி’ என்பது ‘கமிஷனர் ஆஃப் போலீஸ்’-ஐயும் (அப்போதைய போலீஸ் கமிஷனர் டி.கே.ஆர்.) குறிப்பதாக தனது வாக்குமூலத்தில் மாதவராவ் கூறினார்.

வருமான வரிச் சட்டம் 1961, சட்டப் பிரிவு 132 (4)-ன்படி மாதவராவிடம் பெறப்பட்ட வாக்குமூலம் அடிப்படையில் 1-4-2016 முதல் 15-6-2016 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு சுகாதார அமைச்சருக்கு அவர் 56 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். 1-4-2016 முதல் 6-7-2016 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு அதிகாரிகளுக்கு வழங்கிய தொகைகளை அவர் குறிப்பிட்டிருக்கிறார்’ என வருமான வரித்துறை அதிகாரியின் பதில் மனுவில் கூறப்பட்டிருக்கிறது.

போயஸ் கார்டனில் சசிகலா அறையில் நடந்த சோதனையில் குட்கா விவகாரம் தொடர்பான ஆவணம் சிக்கிய தகவலையும் இந்த அபிடவிட்டில் வருமான வரித்துறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close