ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அமைச்சரின் ‘கொம்பன்’ : ஊர் மக்கள் துயரம்

அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்த்த ‘கொம்பன்’ காளை ஜல்லிக்கட்டில் பரிதாபமாக பலியானது. வாடிவாசலுக்கு வெளியே சுவற்றில் மோதியதால் இந்த விபரீதம் நடந்தது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்த்த ‘கொம்பன்’ காளை ஜல்லிக்கட்டில் பரிதாபமாக பலியானது. வாடிவாசலுக்கு வெளியே சுவற்றில் மோதியதால் இந்த விபரீதம் நடந்தது.

தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் ஜெயித்து அமைச்சர் ஆனார். தென் மாவட்டங்களில் பிரபலமான ஜல்லிக்கட்டு நிகழ்வில் ஆர்வம் கொண்ட விஜயபாஸ்கர், தனது வீட்டிலேயே ஜல்லிக்கட்டு காளையை வளர்த்தார்.

விஜயபாஸ்கர் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையின் பெயர், ‘கொம்பன்’! அந்த ஏரியாவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தவறாமல் பங்கேற்பதும், யாராலும் அடக்க முடியாமல் பரிசுகளை அள்ளி வருவதும் கொம்பனின் வழக்கம்! இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ’கொம்பன்’ காளையும் கலந்து கொண்டது.

ஜல்லிகட்டில் வாடிவாசலை விட்டு சீறிப் பாய்ந்த காளைகள், அங்கு நின்றவர்களை தூக்கி பந்தாடியபடி சென்று கொண்டிருந்தன. விஜயபாஸ்கரின் கொம்பனை திறந்து விட்டது, வாடி வாசலுக்கு வெளியே எதிர்பாராதவிதமாக சுவற்றில் மோதிவிட்டது, இதில் அந்தக் காளை மயங்கி விழுந்தது. உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கொம்பன் உயிரிழந்தது.

இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கொம்பன் காளைக்கு ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர். ஜல்லிக்கட்டில் அசத்தி வந்த கொம்பன் காளையின் பரிதாப முடிவு, ஊர் மக்களை துயரத்தில் ஆழ்த்தியது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close