தமிழகத்தின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம்

நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதனை கால தாமதம் என்று கருதவில்லை

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது. தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், மற்ற அதிகாரிகளும் நேரடியாக விசாரணையை பார்த்தனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “ஒவ்வொரு முறையும் நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மே 3ம் தேதிக்குள் மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

நடுவர்மன்ற தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளோம். காவேரி மேலாண்மை வாரியம் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. ஸ்கீம் என்பது பற்றி தற்போதும் எதுவும் சொல்ல முடியாது. காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்த பின்னர் தான் ஸ்கீம் குறித்து விளக்கம் அளிக்க முடியும்” என்று தெரிவித்தனர்.

நீதிபதிகளின் தீர்ப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகத்தின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதனை கால தாமதம் என்று கருதவில்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை உள்ளடக்கியதுதான் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு.  தமிழகத்துக்கான நீர் 14.75 டிஎம்சியாக குறைக்கப்பட்ட ஒரு அம்சம் மட்டும் தான் நடுவர்மன்ற தீர்ப்பில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட ஒன்று. மற்றவை அனைத்தும் நடுவர் மன்ற தீர்ப்பை உள்ளடக்கியது தான். எனவே, அதில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் அடங்கிய ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி மே 3ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக எந்த மாநிலத்துடனும் ஆலோசிக்க தேவையில்லை. மத்திய அரசுக்கு தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது மத்திய அரசு தான் என திட்டவட்டமாக நீதிமன்றம் தெரிவித்ததாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

×Close
×Close