Advertisment

நீட், மும்மொழிக் கொள்கை, மத்திய ஆட்சி பங்கு..! அமைச்சர் ஜெயகுமார் சிறப்புப் பேட்டி

Minister D Jayakumar: முதல்ல அவங்க அழைக்கட்டும். அழையா வீட்டில் விருந்தாளியா நாம போக முடியாது. அழைத்தால், சேர்வதா, வேண்டாமா என்பதை கட்சி டிசைட் பண்ணும்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர் என்கிற பதவி அலுவல்பூர்வமாக கிடையாதே தவிர, மொத்த ஆட்சி - கட்சி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குரலாக ஒலித்துக் கொண்டிருப்பவர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்.

Advertisment

சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் அடுத்தடுத்து கட்சிப் பஞ்சாயத்துகள், உதவி கேட்டு வருகிற தொகுதிவாசிகள், இன்னும் ஓரிரு மீடியா பேட்டிகள் என்கிற சூழலுக்கு மத்தியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்காக பேசினார்.

அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி இனி...

தேர்தல் முடிவு நீங்கள் எதிர்பார்த்ததுதானா?

நாங்கள் மெகா கூட்டணி அமைத்தோம். முழு வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையும் இருந்தது. சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை 38 சதவிகித வாக்குகள் பெற்றிருக்கிறோம்.

திமுக.வுக்கு ரெண்டு விஷயத்துல இந்தத் தேர்தல் ஏமாற்றம்தான். மத்தியில ஆட்சி மாற்றம் ஏற்படும்னாங்க. நடக்கவில்லை. மாநிலத்தில் மாற்றம் வந்துரும்னு நினைச்சாங்க. அதுவும் முடியவில்லை.

திமுக.வை மனமுவந்து மக்கள் ஏற்கவில்லை. ஒரு கோயபல்ஸ் பிரசாரம் செய்து இந்தத் தேர்தல் முடிவை பெற்றிருக்கிறார்கள்.

மீத்தேன், ஹைட்ரோகார்பன், நீட் என மக்களுக்கு எதிரான அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ் - திமுக கூட்டணியினர். ஆனால் ஏதோ இப்போதைய மத்திய அரசு இந்தத் திட்டங்களை எடுத்து வந்தது போலவும், அதற்கு நாங்கள் ஆதரவு கொடுப்பது போலவும் ஒரு கருத்தை உருவாக்கினர்.

அதேபோல நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசினர். மாதம் 6 ஆயிரம் ரூபாய் என்றால், ஒன்றரை லட்சம் கோடி வேண்டும். அதெல்லாம் சாத்தியமா? ஆனாலும் அது எடுபட்டது. எனவே இது திமுக.வுக்கு தற்காலிக வெற்றி.

2014-ல் பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை, இப்போது அதிமுக பெற முடியாமல் போனதற்கு மாநில அரசு மீதான அதிருப்தி காரணம் இல்லையா?

ஒண்ணு புரிஞ்சுகோங்க... அம்மாவின் திட்டங்களை நாம தொடர்ந்து அமல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அம்மாவின் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அம்மா ஆட்சியில் வாக்குறுதி கொடுக்காத திட்டத்தையும் செய்கிறோம். உதாரணத்திற்கு, ஏழைகளுக்கு பொங்கல் பரிசாக தலா 1000 ரூபாய் வழங்கியது!

சமூக நீதிக்கான அரசு இது. ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், பிற்பட்ட சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும் கல்வி, பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என பணியாற்றுகிற அரசு இது. மத்திய அரசிலும் அனைத்துத் திட்டங்களையும் கேட்டுப் பெறுகிறோம்.

தமிழ்நாட்டு உரிமைகளுக்காக போராடவும் செய்கிறோம். மேகதாது அணைப் பிரச்னைக்காக பார்லிமென்டை நடத்த விடவில்லையே! காவிரி நதிநீர்ப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் சென்று ஜெயிச்சோம். இப்போ தண்ணீர் திறந்து விட உத்தரவு வந்திருக்கிறது.

அமைச்சர் ஜெயகுமார் அளித்த சிறப்புப் பேட்டியின் 2-ம் பாகத்திற்கு இங்கு ‘க்ளிக்’ செய்யவும்.

ஆக, எந்த வகையிலும் காம்ப்ரமைஸ் ஆகலை. அப்படி அவசியம் எங்களுக்கு கிடையாது. திமுக.வைப் பொறுத்தவரை டெல்லிக்கு கொத்தடிமையா இருந்தாங்க. பல வருடம் மத்தியில் ஆட்சியில் இருந்து அவங்க தமிழ்நாட்டுக்கு சாதிச்சது என்ன? தொழிற்சாலைகளை கொண்டு வந்தாங்களா? வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்தாங்களா? காவிரி பிரச்னையை மத்திய அரசிடம் சொல்லி, நடவடிக்கை எடுத்தாங்களா? தொப்புள் கொடி உறவான தமிழ் மக்கள் ஒன்றரை லட்சம் பேரை ரெண்டு பேரும் சேர்ந்து கொன்று குவித்தாங்களே... இதைவிட கொடூரம் என்ன இருக்கு?

Minister Jayakumar, Tamil Nadu Fisheries Minister D Jayakumar, அமைச்சர் ஜெயகுமார்

முரசொலி மாறன் மத்திய அமைச்சரா இருந்தபோது, டன்லப்பை மூடினாங்க. அதேபோல எத்தனை தொழிற்சாலைகளை மூடினாங்க. தேனும் பாலுமா அவங்க ஆட்சியில இருந்தப்போ ஓடிச்சு? முழுக்க தங்கள் குடும்பத்தை வளப்படுத்தினாங்க.

நீங்களும் மத்திய அரசுடன் இணக்கமான உறவில் இருக்கிறீர்கள். ஆனால் பெரிய திட்டங்கள் வரவில்லையே?

மதுரை, கோவை, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு நிதி வந்திருக்கிறது. மீன்வளத்துறையில் பிரதமரின் நீலப் புரட்சித் திட்டம், ரெண்டாயிரம் கோடி ரூபாய் ஸ்கீம் அது. உள்ளாட்சியில் நிதி வருகிறது. மெட்ரோ ரயில் செயல்படுத்துறோம். அதுல அவங்க ஷேரும் இருக்கு, நம்ம ஷேரும் இருக்கு. அதுல ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு செகண்ட் பேஸ் ஸ்கீம் போட்டிருக்கோம்.

இதுபோல ஒவ்வொரு துறையாக சுட்டிக்காட்ட முடியும். எங்களைப் பொறுத்தவரை ஆக்கபூர்வமா செயல்படுகிற அரசு. தமிழகத்தை மேம்படுத்த பல திட்டங்களை மத்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தி வாங்கிகிட்டுத்தான் இருக்கோம்.

‘நீட்’டை எதிர்க்கிறீர்கள். ஆனால் அதை தடுக்க முடியாமல், மாணவிகள் தற்கொலை செய்வது இந்த அரசின் தோல்வி இல்லையா?

காங்கிரஸும், திமுக.வும் நீட்டை அறிமுகப்படுத்தாம இருந்திருந்தா இந்தப் பிரச்னையே வந்திருக்காது. அது அப்படியே வளர்ந்து, சுப்ரீம் கோர்ட் போய், எல்லா மாநிலங்களும் அமல்படுத்தணும்னு தீர்ப்பு வந்திருச்சு.

அப்ப எங்க மாநிலத்துக்கு விதிவிலக்கு வேண்டும்னு கேக்குறோம். இங்க மக்கள் அதை ஏத்துக்கலங்கிறதை சொல்றோம். எப்படி மண்டல் கமிஷன் அறிக்கையில 50 பெர்சண்டேஜ்தான் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தப்போ, அரசியல் அமைப்புச் சட்டத்தையே திருத்த முயற்சி பண்ணி அம்மா வெற்றி பெற்றாங்களோ, அந்த அடிப்படையில்தான் கேட்கிறோம். இன்றும், நாளையும் நீட் வேண்டாம் என்பதுதான் அரசின் நிலை.

இதர மாநிலங்களில் தமிழை வலியுறுத்திய முதல்வரின் ட்வீட், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான நிலைப்பாடாக பார்க்கப்பட்டதே?

இது தவறான புரிதல். எங்கள் முன்னோடிகளான அண்ணா, தலைவர் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய மூவரும் சொன்னது இருமொழிக் கொள்கைதான். அதை விட்டுக் கொடுக்கவே மாட்டோம்.

அடுத்து, நம்முடைய தமிழ் மொழியை பிற மாநிலங்களில் ஏத்துக்குங்கன்னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு. அதுக்காக இந்தியை நுழைய விடுறோம்னு அர்த்தமா? அப்ப, இங்க எதுவும் அரசியல் ஆக்கப்படுது. அதனாலதான் அந்த ட்வீட்டை முதல்வர் நீக்கினார்.

நம்முடைய ஸ்டேட்லயே பல மொழிகள் பேசுற மக்கள் இருக்காங்க. அதாவது, மொழி சிறுபான்மையினர்! அந்தப் பகுதிகள்ள அவங்கவங்க விருப்பப்படுற மொழியை அனுமதிக்கிறோம். இது ஒரு ஜனநாயக அமைப்புல சிறுபான்மை மொழிகளுக்கு நாம் கொடுக்கிற மரியாதை.

இப்போ மஹாராஹ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லியில தமிழர்கள் இருக்காங்க. அங்க தமிழ் படிக்கிற குழந்தைகளுக்கு விருப்பப் பாடமா தமிழ் இருந்தாத்தான் சொல்லிக் கொடுக்க முடியும். இதை சேருங்கன்னு சொன்னா, அது எப்படி மும்மொழிக் கொள்கை ஆகும்?

மத்திய அமைச்சரவையில் இணைய அதிமுக.வுக்கு அழைப்பு வந்ததா, வரவில்லையான்னு வெளிப்படையாக சொல்ல முடியுமா?

என்னைப் பொறுத்தவரை, கட்சி முடிவு செய்யுறதுதான். கட்சி முடிவு என்பது அங்க பங்கு பெறணுங்கிறது கிடையாது. ஹேஸ்யமா சில வதந்திகள் பரப்பி விடப்பட்டன. அவங்க அழைச்சா, கட்சியில டிசைட் பண்ணுவாங்க. அழைக்காதபட்சத்தில் அந்த கருத்துக்கு இடமில்லை.

அழைக்கணும்னு அவங்களுக்கு என்ன அவசியம் இருக்குன்னு சொல்லுங்க. அவங்க தனி மெஜாரிட்டியில இருக்காங்க. அவங்க 250 எடுத்து, 23 சீட் நாங்க எடுத்திருந்தா இந்தக் கேள்வி கேட்கலாம். இப்போ அதுக்கு அவசியமே இல்லையே!

ஏன் இந்தக் கேள்வி வருதுன்னா, கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்காங்க!

நிதிஷ்குமாருக்கு கொடுக்கலையே!

அமைச்சரவையில் தங்களுக்கு ஒரு இடம் தருவதாக சொன்னதால், வேண்டாம் என கூறிவிட்டதாக நிதிஷ்குமார் வெளிப்படையாக தெரிவிக்கிறார். ஆனால் அதிமுக.வை பாஜக.வே தவிர்க்கிறதோ? என்கிற கேள்வி எழுகிறது.

நிதிஷைப் பொறுத்தவரை, அவங்க அங்க கணிசமா ஜெயிச்சிருக்காங்க. அதனால அவங்களுக்கு அந்த ரைட் உண்டு. இங்க தவறான கருத்து, பொய்யான வாக்குறுதிகள் பரப்பப்பட்டு திமுக தற்காலிக வெற்றி பெற்று வந்துட்டாங்க. அதனால நிதிஷுடன் ஒப்பிட முடியாது. அதேசமயம், தார்மீக அடிப்படையில் அவங்க அழைப்பு விடுத்தால், கட்சி டிசைட் பண்ணும்.

மத்திய அமைச்சரவையில் சேரக்கூடாது என்கிற நிலைப்பாடு அதிமுக.வுக்கு இருக்கிறதா?

முதல்ல அவங்க அழைக்கட்டும். அழையா வீட்டில் விருந்தாளியா நாம போக முடியாது. அழைத்தால், சேர்வதா, வேண்டாமா என்பதை கட்சி டிசைட் பண்ணும்.

இப்போது பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறதா, இல்லையா?

எங்களைப் பொறுத்தவரை, கூட்டணி இன்று வரை தொடர்கிறது. நாங்க எல்லோரும் நண்பர்கள்தான். அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வரும். பிறகு சட்டமன்றத் தேர்தல் வரும். ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவோம். கூட்டணி தொடர்கிறது என்பதுதான் இப்போதைய நிலைப்பாடு.

(அதிமுக இரட்டைத் தலைமை உள்பட பல முக்கியக் கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதில், அடுத்த பாகத்தில்)

 

Aiadmk Jeyakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment