'ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தில் பங்கு'! - வார்த்தை கோர்ப்பில் அர்த்தம் மாறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு!

ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டி.டி.வி. தினகரன் அணியில் பங்கு போடுகின்றனர்

ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 18 எம்.எல்.ஏ.க்களும் பங்கு போட்டு மக்களை ஏமாற்றுகின்றனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் காவிரி நதி நீர் மீட்பு வெற்றிவிழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற தினகரன் அணியினர் முயற்சி மேற்கொண்டனர். முதலமைச்சர் ஆகிவிடவேண்டும் என்ற கனவில் இருந்த ஸ்டாலின், ஜெயலலிதா இறந்த பிறகு தினகரனோடு சேர்ந்து திட்டமிட்டு காய் நகர்த்திக்கொண்டிருந்தார். பதவி ஆசை காட்டிய தினகரன், 18 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டார். ஆனாலும் அவரால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

இதனால் சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன் வியர்வை, ரத்தம், பணம் ஆகியவற்றை கொடுத்து எங்கள் அனைவரையும் எம்.எல்.ஏ. ஆக்கினார். அதே போல்தான் தற்போது டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 18 பேரும் எம்.எல்.ஏ.க்களாக ஜெயலலிதா தயவால் உருவாக்கப்பட்டனர்.

கவர்னரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அவரை நீக்க வேண்டும் என்று சொன்னதற்குப் பிறகு, உண்மையிலேயே அரசியல் சட்டப்படி, சபாநாயகர் ஒரு தலைமையை ஏற்று அவரை முதலமைச்சர் ஆக்கிய பிறகு, பதினெட்டு பேர் மனுக்கொடுக்குறார்கள். சபாநாயகர் முறைப்படி அவங்களுக்கு அவகாசம் கொடுத்தார். அந்த அவகாசத்தைப் பெற்று அதன் பிறகும் வராமல் அவங்க மைசூர், அமெரிக்கான்னு ஜாலியா சுத்திட்டு இருந்தார்கள். ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் பெற்றுக்கொண்டு அல்லது ஸ்டாலின் மூலம் வாங்கிக்கொண்டு சுற்றுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close