அதிமுக நிர்வாகிகள், தலைவர்கள் பெயரை மாற்றிக் கூறுவது, அமைச்சர்கள் பெயரை தவறாகக் கூறுவது போன்றவை வழக்கமான நிகழ்வாகிவிட்டது. தற்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் என உளறிய சர்ச்சைகளும் உண்டு. இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ஒரு பொதுக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நேற்று முன்தினம்(ஜன.2) எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அமைச்சர் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் சாதனையை பட்டியலிட்டுப் பேசினார். பின்னர், "மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வாஜ்பாய் அறிவித்துள்ளார். மிகவும் அருமையான பட்ஜெட். ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கொத்தனார் மற்றும் சித்தாள் வேலை செய்பவருக்கு 3,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது உண்மையில் மிகப் பெரிய விஷயம்” எனப் பேசியுள்ளார்.
இவரின் பேச்சு வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.