தமிழக நீர் பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக துபாய் செல்ல இருந்த நிலையில், அவருடைய விசாவில் பழைய பாஸ்போர்ட் எண் இருந்ததால், சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பியதால் அமைச்சர் துரைமுருகன் ஏமாற்றம் அடைந்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளனர். அங்கே முதலீடுகளை ஈர்க்க சந்திப்புகளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தமிழக நீர் பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று (மார்ச் 29) காலை துபாய் செல்ல இருந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகனின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, துரைமுருகனின் விசாவில் பழைய பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், அமைச்சர் துரைமுருகனை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். விசாவில் பழைய பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்பட்டிருந்ததால், விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் அமைச்சர் துரைமுருகன் வீடு திரும்பினார். இருப்பினும், அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை துபாய் செல்வார் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அமைச்சர் துரைமுருகன் விசாவில் பாஸ்போர்ட் எண்ணை மாற்றிய பிறகு, இன்று மாலை துபாய் செல்வார் என்று தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"