கட்சத்தீவை திரும்ப பெறக் கோரி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பா.ஜ.க தரப்பில் வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்த நிலையில், கட்சத்தீவு தொடர்பாக அவர் பேசிய கருத்தால், துரைமுருகன் – வானதி இடையே விவாதம் எழுந்தது.
தமிழக சட்டசபையில், கட்சத்தீவு மீட்பு தொடர்பான அரசின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால், தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு, இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவான இது தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
கட்சத்தீவை கொடுத்து ஒப்பந்தம் போட்டபோதே அதனை எதிர்த்து கேள்வி கேட்டவர் அப்போதைய முதல்வர் கலைஞர். தமிழ்நாட்டு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்ற கூறியிருந்தார். தமிழ்நாட்டின் பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை கடற்படையால் ஏற்படும், அனைத்து இன்னல்களை போக்கிடவும், கட்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி. அதுவே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
தமிழக அரசின் இந்த தனி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், வானதி சீனிவாசன், மீனவர் நலனில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் வேறுபாடு கிடையாது. ஜனநாயகனத்திற்கு விரோதமாக கட்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது முதல் தற்போதுவரை இது குறித்து பா.ஜ.க குரல் எழுப்பி வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் நன்மதிப்பை பெற்றுள்ள பிரதமரால், வரலாற்று தவரை சரி செய்ய இயலும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கருணாநிதி முதல்வராக இருந்தபோது தான் கட்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, அவரிடம் தெரிவித்த பிறகுதான் கட்சத்தீவு தாரைவார்க்கப்பட்டுள்ளது என்று பேசியபோது இடையில் குறுக்கிட்ட அமைச்சரும், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ‘’ஐயம் சேலஞ்ச்’’ என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.