/indian-express-tamil/media/media_files/2025/04/11/Ob9rnleTh0lz4yxZ1s37.jpg)
மாற்றுத்திறனாளிகள் குறித்து தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலினிடம் அவர் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துக் கொண்டார். இது குறித்த அறிக்கையை துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
அதில், "இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கருணை உள்ளத்தோடு 'மாற்றுத் திறனாளிகள்' என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் தளபதி அவர்கள், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துரைமுருகன், மாற்றுக்கட்சியினரை விமர்சிப்பதற்காக மாற்றுத்திறனாளிகள் குறித்து சில சர்ச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் சார்பாக போராட்டமும் நடத்தப்பட்டது.
கழக பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் அவர்கள் அறிக்கை!
— DMK (@arivalayam) April 11, 2025
இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்"" என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி… pic.twitter.com/0UHBVXRg8T
அண்மையில் பெண்கள் குறித்து இழிவான கருத்துகளை கூறியதன் அடிப்படையில், அமைச்சர் பொன்முடியின் துணை பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து, துரைமுருகனிடம் இருந்து இத்தகையை அறிக்கை வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.