வேலூரில் அரசு பொருட்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆணவம் அதிகம் எனக் கூறும் தமிழக ஆளுநருக்கு தான் திமிர் அதிகம் என சாடியுள்ளார்.
வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வேலூர் மாங்காய் மண்டி அருகே ‘ அரசு பொருட்காட்சி’ திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொருட்காட்சியை திறந்து வைத்தார்.
வேலூர் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு பொருட்காட்சியானது ஜன.12 தொடங்கி வரும் பிப்.25ம் தேதி வரை அதாவது 45 நாட்கள் நடக்கிறது. இப்பொருட்காட்சியில் அரசின் அனைத்து துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள், பல்வேறு திட்டங்கள் வாயிலாக பயன் பெற்றுள்ள விவரங்கள் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “தமிழக சட்டப்பேரவையில் மரபு மீறவில்லை. காலம், காலமாக கூட்டம் தொடங்கும்போது தமிழ்தாய் வாழ்த்து பாடுவதும், முடியும் போது தேசிய கீதம் பாடுவதும்தான் வழக்கம். இதை ஆளுநர் மாற்றச் சொன்னார். தற்போது தமிழக முதல்வருக்கு ஆணவம் என அவர் கூறியுள்ளார். அவருக்கு தான் திமிர் அதிகம்.” காட்டமாகப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “பெரியார் குறித்து அவதூறு பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக, பா.ஜ.க போன்ற கட்சிகள் புறக்கணித்துள்ளதற்கு காரணம் அவர்களின் பலம் அங்கு குறைவாக இருப்பதால் தான்” என்று கூறினார்.