முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைப்பயிற்சியின்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதாகவும், இன்று மாலை அல்லது ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தி.மு.க. பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை ஆகியோர் உடனிருந்தனர். அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்குச் சென்று முதல்வரைச் சந்தித்து நலம் விசாரித்தனர். முதல்வரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "முதல்வருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் நலமாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். இன்று மாலைகூட அவர் வீடு திரும்பலாம்" என்று உறுதியளித்தார்.
இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.