கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகி விட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, கள்ளச்சாராயத்தை ஒழிப்பது மட்டுமின்றி, டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் அடைத்து முழுமையாக மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டை மதுவின் பிடியில் இருந்து மீட்க முடியும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “அரசு விற்கும் மதுபானத்தில் கிக் இல்லை; இதனால் சிலர் கள்ளச்சாராயத்தை விரும்புகின்றனர்” எனத் தெரிவித்தார். மற்றொரு அமைச்சர் முத்துசாமி, “'தமிழ்நாட்டில் தற்போது பூரண மதுவிலக்கு கொண்டு வரும் சூழல் இல்லை. ஒரு மதுக்கடையை மூடினால் அடுத்த கடையில் போய் மக்கள் குடிக்கிறார்கள்” என்றார்.
இந்த நிலையில் துரைமுருகன் பேச்சுக்கு தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த், பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய வானதி சீனிவாசன், “தமிழ்நாட்டில் மதுரை ஆதரித்து அமைச்சர்களே பேசும் சூழல் உள்ளது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“