அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரின் வீட்டுக் கதவைத் தட்ட வாய்ப்பிருக்கிறது என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில், தமிழக நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “யார் வேண்டுமானாலும் (அரசியல் கட்சி) ஆரம்பிக்கலாம், இதில் என்ன கிடக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த கட்சியில வேண்டுமானாலும் சேரலாம். அதில் என்ன இருக்குது, ஒன்றுமில்லை” என்று கூறினார்.
இதையடுத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரையின்போது, செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கும்போது, எப்போது வேண்டுமானாலும், அமலாக்கத்துறை வேலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரின் வீட்டுக் கதவைத் தட்ட வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு இப்போது பொருளாதாரத்தில் பிந்தங்கியுள்ள மாநிலமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார், இது குறித்த உங்கள் கருது என்ன என்று செய்தியாளர்கள் அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “அமலாக்கத்துறை என் வீட்டு கதவைத் தட்ட வேண்டாம், அந்த கஷ்டம்கூட அவர்களுக்கு வேண்டாம், நான் கதவைத் திறந்தே வைத்திருக்கிறேன்.” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிறது தமிழ்நாடு என்ற அண்ணாமலையின் விமர்சனத்துக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அவன் என்ன எகனாமிஸ்ட்டா (பொருளாதார நிபுணரா), பெரிய பெரிய எகனாமிஸ்ட் எல்லாம் முன்னேறி இருப்பதாக சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என்று கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிக இடங்களைக் கேட்பதாகக் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன் இந்த மாதிரி வதந்திகளுக்கு எல்லாம், நான் பதில் சொன்னதாகப் போட்டு குட்டையைக் குழப்பாதீர்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“