காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது (மேகேதாட்) என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்துவருகிறது.
இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த அவர், “கர்நாடக அரசு சர்வே செய்வதால் மேகதாதுவில் அணைகட்ட முடியாது” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும், காவிரி மேலாண்மை வாரியத்திலும் முறையிடுவோம்.
கர்நாடக அரசுக்கு மேகதாதுவில் அணைகட்ட இதுவரை எவ்வித ஒப்புதலும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அளிக்கவில்லை” என்றார்.
கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணைகட்ட தீவிரம் காட்டிவருகிறது. முன்னதாக, கர்நாடக வனத்துறை அலுவலர் மாலதி பிரியா, “மேகதாது அணை கட்டினால் மூழ்கும் பகுதிகள் மற்றும் மரங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இதன்பின்னர் கர்நாடக அரசு அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுக்கும். இயற்கை அனுமதித்தால் இந்த ஆய்வை 2 மாதத்துக்குள் முடித்த விடுவோம்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“