மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தபோது, அமைச்சருடன் வந்த அதிகாரி கட்டுமானம் உடைந்ததில் தவறி விழுந்தார். அதில், அமைச்சர் எ.வ. வேலு அதிர்ஷ்டவசமாக கீழே விழாமல் தப்பினார். இந்த சம்பவத்தின்போது பதிவான வீடியோவை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த புனரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் வந்த பொதுப்பணித்துறை அதிகாரி கட்டுமானத்தின் மேல் நின்றபோது, திடீரென கட்டுமானம் உடைந்து பள்ளத்தில் விழுந்தார். ஆனால், அவர் காயங்கள் இல்லாமல் தப்பினார்.
திருமலை நாயக்கர் மஹாலில் புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தபோது, பொதுப்பணித் துறை அதிகாரி, மழைநீர் வடிகால் கட்டுமானம் உடைந்து கீழே விழுந்த நிலையில், அருகே இருந்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு நூலிழையில் விழாமல் தப்பினார்.
இந்த சம்பவத்தின்போது பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள், மாவீரன் படத்தில் வருவது போல இன்னும் எத்தனை பேட்ச் ஒர்க் பார்க்க வேண்டி இருக்குமோ என கிண்டல் செய்து வருகின்றனர்.
மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடந்து வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின்னர், அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: திருமலை நாயக்கர் மஹாலில் ரூ. 12 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள தர்பார் அரை, பள்ளியறை, நாடகசாலை, நூலகம் ஆகியவை பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள தளத்திற்கு போடக்கூடிய கற்கள் அனைத்தும் கிருஷ்ணகிரியில் இருந்து கொண்டு வரப்படுகிறது.” என்று கூறினார்.
தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனை குறித்த செய்தியாளர்களி கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ. வேலு, “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமானவரித் துறையின் சோதனை மாதந்தோறும், வாரம்தோறும் நடைபெறுகிறது. இது குறித்து மத்திய அரசை கேட்டால் எங்களது பணி என்று சொல்வார்கள். ஆனால், எங்களைக் கேட்டால் இது பழிவாங்கும் நடவடிக்கை. நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் வருமானவரி சோதனைகளை தவிர்த்து இருக்கலாம்.
தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் பன்முகம் கொண்டவர். அவர் வெறும் எம்.பி மட்டுமல்ல, தொழிலதிபர், கல்வியாளர். பலமுறை இதுபோன்ற சோதனைகளை ஜெகத்ரட்சகன் சந்தித்திருக்கிறார்.
இந்த வருமானவரித்துறை சோதனை என்பது தி.மு.க-வை அச்சுறுத்தும் செயல், ஆனால், இந்த அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் சட்டப்படி எதிர்கொள்வோம்.
மதுரை வைகை ஆற்றங்கரையில் மீதமுள்ள சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சியை விட்டு செல்லும்போது ரூபாய் 6 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடனை வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். அதற்கு ஆண்டுக்கு ரூபாய் 48,000 கோடியை தமிழக அரசு வட்டி கட்டி வருகிறது. இப்படிப்பட்ட சூழலிலும் மக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களை முதல்வர் செய்துதான் வருகிறார்.
கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மதுரை, கோரிப்பாளையம் மற்றும் அப்பல்லோ சந்திப்பு மேம்பால பணிகள் விரைவில் தொடங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“