Minister EV Velu talks about Chennai-Salem 8 way road project: சேலம்- சென்னை 8 வழிச் சாலை திட்டம் என்பது அரசின் கொள்கை முடிவு. திட்டத்தை எதிர்க்கவும் இல்லை. போடுவோம் என்று கூறவும் இல்லை என தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு கூறியுள்ளார்.
தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 8 வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அவர் கூறுகையில், "எங்களைப் பொறுத்தவரை 8 வழிச்சாலை திட்டம் என்பது கொள்கை முடிவு. அரசாங்கம் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. நாங்கள் ஏற்கனவே ஆட்சி நடத்தியுள்ளோம். பல சாலைகளை நாங்கள் அமைத்துள்ளோம். வாகனங்களின் உற்பத்தி நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. அப்போது என்ன செய்ய முடியும், சாலைகளை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும். நிலத்தை கையகப்படுத்திதான் ஆக வேண்டும். நிலங்களை எடுக்க முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது.
இதையும் படியுங்கள்: கல் குவாரி பிசினஸில் கவனம் செலுத்தும் தி.மு.க பிரமுகர்கள்… வளரும் பா.ஜ.க: சுப. உதயகுமாரன் சாடல்
இதன் அடிப்படையில்தான், அப்போதைய எதிர்கட்சித் தலைவரான தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தெளிவாகக் கூறினார்: நாங்கள் திட்டத்தை எதிர்க்கவில்லை. சட்டமன்ற குறிப்பில் இன்னும் அப்படியே இருக்கிறது. ஜீரோ ஹவரில் பேசும்போது தெளிவாக சொன்னார். "நான் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை. அதேநேரத்தில் பிரச்சினைகள் இருக்கிறது. விவசாயிகளை அழைத்துப் பேசுங்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அதற்கு தீர்வு காணுங்கள். அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதை நிறைவேற்றுங்கள். அதையெல்லாம் செய்துவிட்டு நீங்கள் திட்டத்தை நிறைவேற்றுங்கள். திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால், மாற்றுவழி பாருங்கள் என்ற அடிப்படையில் அன்றைக்கு பேசினார்.
ஆனால் இப்போதைக்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். இந்த சாலையை பொறுத்தவரை இதனை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த சாலையை அமைப்பதா வேண்டாமா என்று அரசின் சார்பாகதான் கொள்கை முடிவு எடுக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் அமைச்சராக நான் இந்த விவகாரத்தில் கருத்து சொல்ல முடியாது.
சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் முதல்வர் வேண்டாம் என்று கூறுகிறார். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சாலையை அமைக்க வேண்டும் என்று கூறுவதாக செய்திகள் வருகின்றன. ஆட்சிக்கு வந்தபின்னர், நான் எங்கேயாவது 8 வழிச்சாலையை அமைக்க வேண்டும் என்று பேட்டி கொடுத்ததாக, அறிக்கை வெளியிட்டதாக யாராவது நிரூபிக்க முடியுமா?
எங்களைப் பொறுத்தவரை 8 வழிச்சாலை போட வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் எங்கேயும் பேசவில்லை. இது ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டிய விஷயம். இது மத்திய அரசு நிதியில் அமைகின்ற சாலை, மாநில அரசாங்கம் அமைக்கும் சாலை அல்ல. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தும் திட்டம். எனவே அரசின் சார்பாகதான் கொள்கை முடிவு எடுக்க முடியும். முதலமைச்சர் தலைமையில் கூடி கொள்கை முடிவு எடுக்கப்படும்.
இன்றைக்கு சாலை தொடர்பாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களிடம் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வபெருந்தகை அவர் தொகுதிக்குட்ப்பட்ட மக்களிடம் பேசி வருகிறார். அன்றைய ஆளும் கட்சியிடமும் நாங்கள் இதைத்தான், அதாவது மக்களை அழைத்து பேசுங்கள் என்று கூறினோம். அவர் செய்யவில்லை. இவ்வாறு எ.வ.வேலு கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.