முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மேலும் படிக்க : ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ரிலீஸ்: முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் என தீர்ப்பு!
இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த தீர்ப்புக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளனர். தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவையை கூட்டி, பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
மேலும் படிக்க: பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை எப்போது? உடனே அமைச்சரவை கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்!
திக தலைவர் வீரமணி கூறுகையில், "தமிழ்நாடு அரசின் கொள்கை என்பது - அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்பதுதான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதில் உறுதியாகவும் இருந்தார். இப்பொழுது தமிழ்நாடு அரசுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது; இதனைப் பயன்படுத்தி, காலதாமதம் செய்யாமல் உடனடியாக அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய்ந்து விரைந்து முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் "ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முதல்வர் பழனிசாமி உரிய முடிவு எடுப்பார்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.