அமைச்சர் ஜெயக்குமார், பூம் பூம் மாட்டிடம் இருந்து தலையில் முத்தம் (ஆசிர்வாதம்) வாங்கிய வீடியோ மட்டுமின்றி இவர்களை காக்கவேண்டும் என்ற கருத்து சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் தன் வீட்டின் அருகே அமைச்சர் ஜெயக்குமார் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பூம்பூம் மாடு ஒன்று வந்தது. அதனைக் கண்ட அமைச்சர் ஜெயக்குமார் பூம்பூம் மாட்டுக்காரரிடம் சிறிது நேரம் உரையாடினார். அப்போது, அமைச்சர் ஜெயக்குமாரை ஆசிர்வதிக்குமாறு, மாட்டிடம் பூம்பூம் மாட்டுக்காரர் கூறினார். உடனே பூம்பூம் மாடு அமைச்சர் ஜெயக்குமாரை ஆசிர்வதித்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம்பூம் மாட்டுக்காரரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், பூம்பூம் மாட்டுக்காரரின் பேச்சு தன்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களை கேலியாகப் பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், கீழடி நாகரிகம் குறித்து பெருமைப்பட்டுக் கொள்ளும் அதேவேளையில் இவர்களைப் போன்றவர்களைக் காப்பாற்றுவதும், கீழடி போன்ற நாகரிகத்தைக் காப்பாற்றுவதும் ஒன்றுதான் என்று தெரிவித்தார்.