ஜெயலலிதா இருக்கும்போது இந்த படம் எடுத்திருந்தால் இவர்கள் வீரர்கள்: சர்கார் குறித்து அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திரைப்படம் எடுப்பவர்களுக்கு குளிர் விட்டுப்போச்சு என்று அமைச்சர் ஜெயகுமார் சர்கார் குறித்து விமர்சித்துள்ளார்.

தமிழுக்கு தொண்டாற்றிய இத்தாலிய கவிஞர் வீரமாமுனிவரின் பிறந்த நாளையொட்டி, சென்னையில், தமிழக அரசு சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சர்கார் படத்தையும் திரைப்பட இயக்குநர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சர்கார் குறித்து அமைச்சர் ஜெயகுமார் பேட்டி :

சர்கார் படத்தில் அதிமுக அரசு குறித்து பல சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும், அவற்றை உடனே நீக்க வேண்டும் என்றும் பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இன்று பேட்டியளித்த அமைச்சர் ஜெய குமார், “ திரைப்பட நடிகர்களுக்கு அரசியலை வைத்து படம் எடுப்பது பேஷனாகிவிட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாமல் அவர்களுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது. அவர் இருந்தபோது இதுபோன்ற கருத்துகள் கொண்ட திரைப்படங்கள் வெளியானது உண்டா. ஜெயலலிதா இருந்தபோதே இதுபோன்று படங்கள் எடுத்திருந்தால் இவர்களை வீரர்கள் என்று மெச்சியிருப்போம்.

திரைப்பட நடிகர்களுக்கு முதலமைச்சர் போன்ற கதாபாத்திரங்களிலும், நல்லவர் போன்ற கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அது தவறு இல்லை. அது போன்ற கதாபாத்திரங்களை மக்கள்தான் ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும். அதற்கான கொள்கைகளை வெளிப்படுத்துவது என்றால் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக பிறருடைய உணர்வுகளை மிதித்து, அவர்களுடைய சிந்தனைகளை திணித்து, தமிழ் மக்களின் உணர்வுகளை அழித்து தன்னை முன்னிலைப்படுத்த கூடிய செயல் என்றால் அந்த செயலை நிச்சயமாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சி.வி. சண்முகம் கூறியதை போல ஒரு திரைப்படம் என்பது நல்ல கருத்துகளை தெரிவிப்பதாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் எம்ஜிஆரின் திரைப்படங்கள் எல்லாம் இருந்தது. அவர் படத்திற்கு இது போன்ற எதாவது ஒரு விமர்சனம் வந்திருக்கிறதா. இன்று இல்லை, நேற்று இல்லை, உலகம் உள்ளவரை போற்றக்கூடிய ஒரு தலைவர் என்றால் அது எம்ஜிஆர் தான்.

இந்த நடிகர்களெல்லாம் எம்ஜிஆர் போன்று வந்துவிடலாம் என்று நினைத்துகொண்டு இருக்கிறார்கள். என்ன அழுதுபுறண்டாலும், மாண்டாலும் எம்ஜிஆருக்கு கொடுத்த அங்கிகாரத்தை வேறு யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். நடிகர்கள் உங்களை முன்னிலைப்படுத்தி கொள்ளுங்கள் அதற்காக அடுத்தவர்களின் உணர்வுகளை மிதிக்காதீர்கள். சமுதாயத்திற்கு மாறுபட்ட கருத்தாக இருக்கும் நிலையிலே, சர்கார் திரைப்பட குழு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close