'ஆடியோவில் உள்ளது என் குரல் அல்ல' - அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு

என்னை நேரடியாக எதிர்க்கத் திராணி இல்லாதவர்கள் போலியான ஆடியோவை தயார் செய்து வெளியிட்டுள்ளார்கள். டி.டி.வி.தினகரனைச் சார்ந்தவர்களே ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள்

என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் போலியான ஆடியோவை தயார் செய்து வெளியிட்டுள்ளார்கள் என்று வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

உலகம் முழுவதும் வைரலாக பேசப்படுவது மீ டூ விவகாரம் தான். இதில் பல பிரபலங்களின் பெயர் தினம் சிக்கி வருகிறது. எது உண்மை, எது பொய் என்று கணிக்கவே முடியாத அளவிற்கு வகை வகையாய் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் குறித்து ஒரு ஆடியோ இன்று வெளியானது. சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் இளம் பெண் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தனது தாயுடன் ஒரு சிபாரிசு வேண்டி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்ததாகவும், அதன் பிறகு ஏற்பட்ட தொடர்பால், ஆகஸ்ட் 9ம் தேதி கவிதாவுக்கு வட சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆண் குழந்தை ஒன்று பிறந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, குழந்தையின் பிறப்பை பதிவு செய்ய மாநகராட்சி அலுவலகத்திற்கு கவிதா சென்றுள்ளார். அங்கு குழந்தையின் தந்தை பெயர் என்ன என்று அதிகாரிகள் கேட்க, அதில் அமைச்சரின் பெயரே ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது பதிவு செய்யப்பட்ட அந்த ஆவணங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதன் காரணமாக, இந்த விவகாரம் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தன் மீதான புகாரை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் அல்ல. அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் என்மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர்.

என்னை நேரடியாக எதிர்க்கத் திராணி இல்லாதவர்கள் போலியான ஆடியோவை தயார் செய்து வெளியிட்டுள்ளார்கள். டி.டி.வி.தினகரனைச் சார்ந்தவர்களே ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள். ஆடியோவின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பிறப்புச் சான்றிதழில் என் பெயர் இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த உலகத்தில் டி.ஜெயக்குமார் என நான் ஒருவன்தான் இருக்கிறேனா என்ன? இந்த ஆடியோ ஒரு மாத காலமாகத் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டது. இது ஒரு சதி செயல். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை” என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close