காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சியினருடன் சென்று சந்திக்க பிரதமர் நரேந்திர மோடியின் அப்பாய்ன்மென்ட் கேட்டிருக்கிறோம் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
அமைச்சர் ஜெயகுமார், சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். எனவே அம்மாவின் அரசு அனைத்துக் கட்சிகளையும் விவசாயிகளையும் ஒருமித்து, பிரதமரை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதில் என்ன செய்வது, எப்படி அழுத்தம் கொடுப்பது என அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.’ என்றார்.
நெடுஞ்சாலைத் துறை டெண்டர்கள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது டிடிவி அணியை சேர்ந்த வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் புகார் தெரிவித்தது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஜெயகுமார், ‘ஜனநாயகத்தில் ஒரு குறை என்றால் அதை நிர்வாக அமைப்பிடமோ, நீதிமன்றத்திலோ முறையிட்டு தீர்வு காணலாம். அப்படி இல்லாமல் கோட்டையில் மக்கள் வருகிற இடத்தில் நின்று கொண்டு அதிகாரிகளுக்கு இடைஞ்சல் கொடுத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்.
ஒரு தாளை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றிவேலும் தங்க தமிழ்செல்வனும் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். எல்லாப் பிரச்னையையும் தினகரனே பேசுவதுபோல, இதையும் அவரே பேசியிருக்கலாமே? வெற்றிவேலையும் தங்க தமிழ்செல்வனையும் மாட்ட விட்டுவிட்டு இப்போது தினகரன் வேடிக்கை பார்க்கிறார். அவரது மொத்த இயல்பே இதுதான்.
சாதாரணமாக இருந்த தினகரன் இன்று ஆயிரக்கணக்கான கோடிகளை குவித்திருக்கிறார். தான் திருடி, பிறரை நம்பார் என்பது போல தினகரன் பேசி வருகிறார்.’ என ஜெயகுமார் கூறினார்.