தமிழகத்தை ஆண்மையுள்ள அரசு தான் ஆள்கிறது, அதிமுக வை தேவையில்லாமல் உரசி பார்ப்பதை எச்.ராஜா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியார்களிடம் பேசிய அவர், " அதிமுக அரசு ஆண்மையான அரசு. ட்விட்டரில் எச்.ராஜா சொன்ன சொற்கள் அவருக்குத்தான் பொருந்தும். ட்விட்டரில் கருத்து தெரிவித்து விட்டு அட்மின் மீது பழி போட்டவர். நீதிமன்றம் சென்ற பிறகு மன்னிப்பு கேட்பது தான் ஆண்மை செயலா? " என்று தெரிவித்தார்.
முன்னதாக, கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்றும், பொது இடங்களிலும், ஊர்வலத்திலும் விநாயகர் சிலைகளை நிறுவ தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
தமிழக அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த எச். ராஜா, " கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு" பதிவிட்டார். மேலும், சென்னையிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டு விட்டது. இதனால் கொரோனா வராதாம். ஆனால் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 5-10 பேர் சமூக இடைவெளியோடு விசர்ஜனம் செய்தால் கொரோனா வந்துடுமாம். பகுத்தறிவு. பகுத்தறிவு" என்று தமிழக அரசை விமர்சனம் செய்தார்.
முன்னதாக, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் ராஜ் சத்யன் தனது ட்விட்டரில், " நீதிமன்றத்தை பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு, மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை, சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில், உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன்" எச். ராஜாவிற்கு பதிலளித்தார்.
இதற்கிடையே, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "உயர்நீதிமன்ற தீர்ப்பின்படியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிமுறைகளின் அடிப்படையில் தான் பொது இடங்களிலும், ஊர்வலத்திலும் விநாயகர் சிலைகளை நிறுவ தமிழக அரசு தடை விதித்ததாக தெரிவித்தது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil