அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட சம்பளப் பட்டியல் சரியல்ல : தலைமைச் செயலக ஊழியர் சங்கம் விளக்கம்

'தலைமைச் செயலக பணியாளர்களின் உண்மையான ஊதியத்துக்கும், அமைச்சர் குறிப்பிட்ட ஊதியத்துக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. '

அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட சம்பளப் பட்டியல் தவறானது என தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி விளக்கம் அளித்தார்.

அமைச்சர் ஜெயகுமார் கடந்த 7-ம் தேதி வெளியிட்ட பத்திரிகை அறிவிப்புகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெறுகிற சம்பள விவரங்களை பட்டியல் இட்டார். மாநில அரசின் மொத்த வரி வருவாயில் 70 சதவிகிதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும், 24 சதவிகிதம் மாநில அரசின் கடன்களுக்கான வட்டியாகவும், எஞ்சிய 6 சதவிகித வரி வருவாய் மட்டுமே எஞ்சிய 98 சதவிகித மக்களுக்கு பயன்படுவதாக புள்ளி விவரங்களை வெளியிட்டார்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை வாபஸ் பெற வேண்டுகோள் வைத்து ஜெயகுமார் வெளியிட்ட அந்தப் பட்டியலுக்கு பதில் தெரிவித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் 7-ந் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தலைமைச் செயலக பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அமைச்சுப் பணியாளர்களின் ஊதியப்பட்டியல் இடம் பெற்றுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள ஊதியம், சராசரி ஊதியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரி ஊதியத்தை, ஒரே பதவியில் 20 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் பணியாற்றினால்தான் பெற முடியும். தலைமைச் செயலக பணியாளர்களின் உண்மையான ஊதியத்துக்கும், அமைச்சர் குறிப்பிட்ட ஊதியத்துக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு உண்மைக்கு மாறானது.

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவியாளர் (9-ம் நிலை) ரூ.21,400 (அகவிலைப்படி சேர்த்து) பெறும் நிலையில், அதை அமைச்சர் ரூ.47,873 என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோல், உதவி பிரிவு அலுவலர் பெறும் சம்பளம் 38 ஆயிரத்து 948 ரூபாயை, ரூ.83,085 என்றும்;

பிரிவு அலுவலர் பெறும் சம்பளம் 60 ஆயிரத்து 27 ரூபாயை, ரூ.99,860 என்றும்; சார்பு செயலாளர் பெறும் சம்பளம் 63 ஆயிரத்து 451 ரூபாயை, ரூ.1 லட்சத்து 4,160 என்றும்; துணைச் செயலாளர் பெறும் சம்பளம் 66 ஆயிரத்து 233 ரூபாயை, ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 910 என்றும்;

இணைச் செயலாளர் பெறும் சம்பளம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 38 ரூபாயை, ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 44 என்றும்; கூடுதல் செயலாளர் பெறும் சம்பளம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 964 ரூபாயை, ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 969 என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

×Close
×Close