திருச்சிக்கு மேயரானவங்க என்னை மிரட்டியே மேயரானாங்க; என்று ஹோலிகிரஸ் கல்லூரி விழாவில் அமைச்சர் நேரு பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
திருச்சியில் பெண்களுக்கென இயங்கி வரும் மிகவும் புகழ்பெற்ற தென்னிந்தியாவில் முதன்மையான, பழமை வாய்ந்த புனித சிலுவை(ஹோலி கிராஸ்) தன்னாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற இந்தக்கல்லூரி 1923-ம் ஆண்டில் திருச்சிலுவை கன்னியர் சபை சகோதரிகளால் 5 மாணவிகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது இக்கல்லூரியில் 6,236 -க்கும் மேல் மாணவர்களைக் கொண்டு இயங்கி வருகின்றது. ஹோலி கிராஸ் கல்லூரியின் தொடக்க நிலையிலிருந்து இன்றைய இமாலய வளர்ச்சியின் பயணத்தை ஒலி-ஒளியின் மூலம் விழா அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கவின் மிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நூற்றாண்டு விழாவை மேலும் சிறப்பு செய்யும் வகையில் 6 புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் கல்லூரியின் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டு துவங்கப்பட்டது. "தொழில் முனைவோம்' மேம்பாட்டுத் திட்டம்" (Entrepreneurial skill dev, center) இத்திட்டமானது பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்தவும், நிநி நிலைகளைச் சீர்படுத்தவும், முழுமையான சுதந்திரத்தைப் பெற்று வாழ்வியலை மேம்படுத்துவதற்கான எல்லைகளை விரிவுபடுத்துகின்ற நளமாக அமைகிறது.
குறைந்த கட்டணத்தில் நிறைவான மருத்துவ சேவையைப் பெறும் பிரிவு (Low cost medical unit Rapha) எனும் அடிப்படையிலான இரண்டாவது திட்டம் ஏழை எளிய மக்கள் பயன்பெறவும், அவர்களின் வாழ்வு மேம்படவும், வாழ்த்திடவும் இத்திட்டமானது தொடங்கப்பட்டது. சுகாதார விழிப்புணர்வினைப்பெற்று ‘விழுதுகள் நூறு' (100 free Edu first Gen) என்ற மூன்றாவது திட்டம் கல்லூரி கல்வி கற்கும் முதல் தலைமுறையினைச் சார்ந்த 100 மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் இலவச கல்வியின் கவனம் செலுத்தும் திட்டமாக செயல்படுத்தப்பட்டது.
புனித சிலுவை நூற்றாண்டு நினைவு கட்டடம்' (Centenary Building) எனும் திட்டமானது நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. இளையோர் கிராமபுற மக்கள் தொழில் முனைவோர் வளரும் தொழிலதிபருக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல் திட்டம் (100 Sur Ups) தொடங்கப்பட்டது. பின் தங்கிய கிராமத்தைச் சிறந்த கிராமமாக மாற்றும் திட்டம் (Smut Village} தொடங்கப்பட்டது.
திருச்சிலுவை சபையின் மாநிலத் தலைவி அருட்சகோதரி லூர்து அடைக்கலசாமி கல்லூரியின் அருமை, பெருமைகளை நினைவுகூர்ந்து கல்லூரி மாணவிகளுக்கும், நிர்வாகத்திற்கும் தனது வாழ்த்துச்செய்தியினை வழங்கி விழாவினைச் சிறப்பித்தார். புலம்பெயர்ந்த தமிழர்களின் மாநில ஆணையர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நனை மற்றும் மறு வாழ்வு துறையின் ஆணையர் மற்றும் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான ஜெசிந்தா லாசரஸ் (AS) வாழ்த்துரை வழங்கினார்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இனிகோ இருதயராஜ் சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வினைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்வின் தொடக்கவுரையை வழங்கினார். தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நிகழ்வின் முத்தாய்ப்பான உரையை வழங்கினார்.
இதில் அவர் பேசும்போது; இங்கு அமர்ந்திருக்கும் திருச்சி மாநகர முன்னாள் மேயர் காங்கிரஸை சார்ந்த சுஜாதா பேசும்போது சொன்னாங்க, இந்த கல்லூரி அடக்கம், ஒழுக்கம், பணிவு அனைத்தையும் கற்றுக் கொடுத்திருக்கின்றது என்றாங்க, ஆனா, திருச்சி மாநகர மேயர் பதவியை இங்குள்ள முன்னாள், இந்நாள் மேயர்கள் என்னை மிரட்டியே மேயரானார்கள் என பேசி அனைவரது சிரிப்பொலியையும், கைத்தட்டலையும் பெற்றுச்சென்றார்.
ஹோலி கிராஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழா துவக்க நிகழ்வில் திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன், திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர்கள் சாருபாலா தொண்டைமான், சுஜாதா, தலைமை வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரன், மண்டலம் 3'ன் தலைவர் மு.மதிவாணன் ஆகியோரும், கல்லூரி பேராசிரியர்களும், முன்னாள், இந்நாள் மாணவிகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஹோலி கிராஸ் தன்னாட்சிக் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி முனைவர் கிறிஸ்டினா பிரிஜிட் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் துணை முதல்வரும் வரலாற்றுத்துறை தலைவருமான முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் நூற்றாண்டு தொடக்க விழா இனிதே நிறைவுற்றது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.