மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசு லஞ்சமும் ஊழலும் நிறைந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு, கமல்ஹாசன் தனது சொத்துக் கணக்கு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என்று சவால் விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பரப்புரையின் போது, ஆளும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அண்மையில், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனைகளில் பல இடங்களில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டன. இதனைக் குறிப்பிட்ட கமல்ஹாசன், “லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி” என்று கடுமையாக விமசித்திருந்தார்.
இதையடுத்து, சமீபத்தில் கமல்ஹாசன் பதிவிட்ட மற்றொரு ட்வீட்டில், “நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? என்று நான் கேட்பேன்” என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, அரியலூர் மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார்.” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். முதல்வரின் விமர்சனத்துக்கு கமல்ஹாசன், முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பதில் மகிழ்ச்சி என்று ட்வீட் செய்திருந்தார். அதோடு, முதல்வரை விமர்சிகும் விதமாக எம்ஜிஆர் பாடல் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதுமட்டுமில்லாமல், எம்.ஜி.ஆரைப் பார்க்காதவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடும்போது, அவர் மடியில் வளர்ந்த நான் எம்.ஜி.ஆர் பேச முழு உரிமை உண்டு என்றும் கூறினார்.
இந்த நிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “தமிழக அரசை விமர்சிக்கும் கமல்ஹாசன், தனது சொத்துக் கணக்கு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? நான் எனது சொத்துக் கணக்கு குறித்து வெள்ளை அறிகை வெளியிடத் தயார்” என்று சவால் விடுத்துள்ளார்.
கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “எம்ஜிஆரை பழித்து பேசிய யாரையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை. எம்ஜிஆரை மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர்” என்றுகூறினார்.
பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலையைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “அண்ணாமலை ஐபிஎஸ் படித்தாரா என்று தெரியவில்லை. மத்தியரசு விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்குகிறார்கள். அவர்கள் எதில் இருந்து கொடுக்கிறார்கள். அரசு திட்டங்களுக்கு, அரசு நிதியில் இருந்துதான் கொடுக்க வேண்டும். இதை தவறாக சித்தரிக்கும் அண்ணாமலை என்ன அளவுகோலில் பேசுகிறார் என்று தெரியவில்லை” என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, கமல்ஹாசனின் விமர்சனம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கயி, “நான் எனது சொத்து கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார். அதே போல, கமல்ஹாசன் அவருடைய சொத்துக் கணக்கு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? மனசாட்சிபடி கமல்ஹாசன் தனது ஊதியம் குறித்து கணக்கு சொல்லட்டும். நாங்களும் சொல்ல தயராக இருக்கிறோம்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"