வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், கலந்துகொண்ட ஆளும் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி, மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்ததால் மலைக் கிராமத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது என்று கூற, அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற அணைக்கட்டு தொகுதி திமுக எம்.எல்.ஏ நந்தகுமார் நான் போராடியததால்தான் சாலை அமைக்கப்படுகிறது என்று மேடையிலேயே பதிலடி கொடுக்க பரபரப்பானது.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அமைச்சர் கே.சி.விரமணி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தொகுதியின் எம்.எல்.ஏ நந்தகுமார் திமுகவைச் சேர்ந்தவர். இதனால், அமைச்சர் கே.சி.வீரமணி அணைக்கட்டு தொகுதியில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது, அரசாங்க நடைமுறையின்படி, அந்த தொகுதியின் திமுக எம்.எல்.ஏ-வும் கலந்துகொள்வது என்பது அரசாங்க நடைமுறை.
அப்படி, இன்று அணைக்கட்டு தொகுதியில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணியும் அணைக்கட்டு தொகுதி திமுக எம்.எல்.ஏ ஏ.பி.நந்தகுமாரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கிய அமைச்சர் கே.சி.வீரமணி பேசுகையில், “இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் ரோடு போட்டுத் தருகிறோம் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன வார்த்தைப்படி, ரோடு போடப் போகிறார்கள். அதற்கு வேண்டிய நிதி ஐந்தரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்போகிறார்கள். இதை, எம்.எல்.ஏ-வே அழகாக கோடிட்டுகாட்டிவிட்டார்” என்று கூறினார். அப்போது, மேடையில், அமர்ந்திருந்த அணைக்கட்டு தொகுதி திமுக எம்.எல்.ஏ நந்தகுமார், அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, “அரசு நிகழ்ச்சியில் இரட்டை இலை பற்றி பேசாதீர்கள். நான் உதய சூரியன் பற்றி பேசுவேண்டியதிருக்கும். உதய சூரியனுக்காக நாங்கள் ஓட்டு கேட்டிருக்கிறோம். நான் போராடி இருக்கிறேன். அதன் பிறகுதான் இந்த ரோடே வந்தது.” என்று கூறினார். அமைச்சர் உடனடியாக, சரி நான் வாபஸ் பெறுகிறேன். என்று தெரிவித்து தனது உரையைத் தொடர்ந்தார்.
அரசு நிகழ்ச்சில் ஆளும் அதிமுக அமைச்சருக்கும் எதிர்க்கட்சி திமுக எம்.எல்.ஏ-வுக்கும் விவாதமான என்ன அந்த ரோடு விவகாரம் என்றால், திமுகவினர், பீஞ்சமந்தை மலைக்கிராமத்துக்கு தொடங்க உள்ள சாலை அமைக்கும் பணி குறித்து தெரிவிக்கின்றனர்.
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு ஒன்றியம் பீஞ்சமந்தை மலை கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதியே இல்லாத நிலையில் இருந்தது. 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ நந்தகுமார், சட்டமன்றத்தில் இந்த மலை கிராம சாலைக்காக பல முறை பேசி இருக்கிறார். 2017 ஆண்டு அமைச்சர் கே.சி.வீரமணியிடம் விழா ஒன்றில் பேசும் போது இன்னும் 3 மாதத்தில் இந்த சாலை அமைக்கப்படும் என்று கூறினார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அடுத்து 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் இதே வாக்குறுதியை கொடுத்தார். ஒரு வருடம் முடிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மாவட்ட ஆசியர்கள், அரசு அதிகாரிகள், வனத் துறை அதிகாரிகள் என்று அனைவரையும் பல முறை சந்தித்து பல்வேறு அழுத்தங்களை கொடுத்து இன்று அவரது முயற்சியால் அந்த சாலை பணிக்காக திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு பணி நடைபெறும் தருவாயில் உள்ளது.
உண்மை இப்படி இருக்க இன்று அணைக்கட்டு தொகுதியில், விழாவில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் பொது மக்கள் என பலர் கலந்துக் கொண்ட அரசு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் நாங்க இரட்டை இலைக்கு வாக்கு கேட்டோம். நீங்க வாக்களித்தீர்கள் அதனால் தான் இந்த சாலை வந்தது என்று அமைச்சர் பேசிய போதே அதே மேடையில் அவருக்கு தக்க பதிலடி கொடுத்து அமைச்சரின் பேச்சை வாபஸ் பெற வைத்தார். அதாவது, இது அரசு நிகழ்ச்சி இந்த விழாவில் அமைச்சர் இரட்டை இலை பற்றி பேசினால் நான் உதயசூரியன் பற்றி பேசுவேன், மேலும் இந்த மக்கள் எங்களுக்கு உதயசூரியனுக்கு தான் வாக்களித்தார்கள். நான் தான் இந்த சாலை திட்டத்தை போராடி பெற்றுத் தந்தேன் என்று அதே மேடையில் அமைச்சருக்கு பதிலளித்தார், உடனடியாக அமைச்சர் தனது பேச்சை மேடையிலே வாபஸ் பெற்றுக் கொண்டார்.” என்று திமுகவினர் கூறுகின்றனர்.