கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையிலும், அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையிலும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து 34 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாவும், 51 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகையும், 11 பயனாளிகளுக்கு உழவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் 111 பயனாளிகளுக்கு 23 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; முதல்வர் ஆணைக்கிணங்க வருவாய் துறை சம்பந்தமான ஆய்வு செய்யப்பட்டது. பணிகளை விரைந்து நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
தாலுகா அலுவலகத்திற்கு மக்கள் அதிகம் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. முடிந்தளவு மக்கள் ஆன்லைனை பயன்படுத்த வேண்டும்.

கோவை மாவட்டத்திற்கு நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும். அதற்காக நிலங்களை உடனே எடுத்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 4 லட்சம் பேருக்கு ஒரு தாலுகா அலுவலகம் உள்ளது. வருகின்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, குறிப்பிட்ட அளவிற்கு தாலுகா அலுவலகங்கள் அதிகரிக்கப்படும்.
கோவை மாவட்டத்தின் மீது முதலமைச்சருக்கு தனிப்பட்ட அக்கறை உள்ளது. எது கேட்டாலும் செய்து தருவார். செந்தில் பாலாஜி கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருப்பது நல்ல காரியம். இப்பகுதி முன்னேற வேண்டும் என நினைக்கிறார்.
பட்டா இருந்தால் பத்திரப்பதிவு உடனே மாற்றம் செய்து தரப்படுகிறது. குடும்பத்தில் இரண்டு மூன்று பேர் இருந்தால் தான் தாமதம் ஏற்படுகிறது. எந்த மனுக்களாக இருந்தாலும் 15 நாட்களுக்கு மேல் இருக்க கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி 15 நாட்களுக்குள் முடித்து தர முயற்சித்து வருகிறோம்.

மேலும் இ சேவை மையத்தில் சில தவறுகள் நடப்பதாக கவனத்திற்கு வந்துள்ளது. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் கேரள அரசு நில அளவீடு செய்ததாக கூறுவது, நூறு சதவீதம் இல்லை. தேனி மாவட்டத்தில் சம்மந்தப்பட்ட விவசாயிகள் அழைத்து பேசிய போது, நாங்கள் அளித்த விளக்கங்களை ஏற்றுக் கொண்டார்கள். எங்களது கவனத்திற்கு வராமல் நில அளவீடு செய்யக்கூடாது என கேரள அரசிடம் கூறியுள்ளோம்.
கோவை மாவட்டத்தில் புறவழிச்சாலை, பில்லூர் குடிநீர், சிப்காட் ஆகியவைகளுக்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் கம்பெனி நிலங்களை எடுக்கிறோம். யாரையும் கஷ்டப்படுத்தாமல் இழப்பீடு வழங்கி நிலங்களை எடுத்து வருகிறோம். வருவாய் துறையில் என்ன முறைகேடு நடந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். 90 சதவீத கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை முடிக்க நிலங்களை கையகப்படுத்த கூடுதல் இழப்பீடு தருகிறோம். கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டத்திற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“