மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருவாரூரில் கலைஞர் நினைவை போற்றும் வகையில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை மறுதினம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் கலந்து கொண்டு கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார்.
Advertisment
திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட, கிழக்கு மாநகர மாவட்ட மாணவர் அணி சார்பில் "கலைஞர் சுடர் தொடர் ஓட்டம்" திருச்சி சிந்தாமணி அண்ணா சாலையிலிருந்து புறப்பட்டது. இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்தச் சுடர் நாளை மறுதினம் திருவாரூரில் நடைபெற உள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட உள்ளது.
திருச்சியில் சிந்தாமணி அண்ணா சிலையில் துவங்கிய கலைஞர் சுடர் தொடர் ஓட்டத்திற்கு, அரியமங்கலம் எஸ்.ஐ.டி அருகே 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட சுடர் ஓட்டம் திருவரம்பூர், துவாக்குடி, செங்கிப்பட்டி, வல்லம், தஞ்சை, நீடாமங்கலம், கொரடாச்சேரி வழியாக திருவாரூர் சென்று அடைகிறது. செல்லும் வழிகள் எல்லாம் சுடர் ஓட்டத்திற்கு தி.மு.க நிர்வாகிகள் வரவேற்பு கொடுக்கின்றனர். இந்நிகழ்வில் கோட்டத் தலைவர் மதிவாணன், மற்றும் கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil