‘பொறுத்தருள்க… இனி இவ்வாறு நிகழாது’ – எம்.பியை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்த கே. என். நேரு

அமைச்சரின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் கணேசன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்

மதுரையில் கடந்த புதனன்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எம்பி வெங்கடேசனை ஒருமையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளரை சந்திப்பின் போது அமைச்சரிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்த கேள்வியை சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள்… மதுரையில் வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான் அந்த ஆள் கிட்ட இந்த கேள்வியை கேளுங்கள். என்று பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக, அமைச்சரின் பேச்சு பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

அமைச்சரின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் கணேசன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். சு.வெங்கடேசன் எம்.பி. குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள் என குறிப்பிட்டிருந்தனர். அமைச்சர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பல தரப்பினும் குரல் கொடுக்க தொடங்கினர்.

இப்பிரச்சினை விஷவரூபமடைய, தான் ஒருமையில் பேசியதற்கு அமைச்சர் கே.என்.நேரு தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அந்த ட்வீட்டில், ” ”பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனிமேல் இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Minister kn nehru apologize for spoke harsh words against mp venkatesan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com