/indian-express-tamil/media/media_files/2025/03/25/plXxA2UAaZZWY1zRLdJt.jpg)
ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு நகராட்சிகளும், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படவுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 25) நடைபெற்ற சட்டப்பேரவை அமர்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு உரையாற்றினார். அப்போது, பல்வேறு புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். குறிப்பாக, தமிழ்நாட்டில் நகர்ப்புற அமைப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருவதாக அவர் கூறினார்.
அதன்படி, தமிழ்நாட்டில் நகராட்சிகளின் எண்ணிக்கை 146-ஆகவும் பேரூராட்சிகளின் எண்ணிக்கை 491-ஆகவும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான எண்ணிக்கைகள் அனைத்தும் உயர்த்தப்பட்ட பின்னர் தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் இருக்கும் என்று கே.என். நேரு அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய இரு நகராட்சிகளும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று கே.என். நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேகமாக நகரமயமாகி வரும் மாநிலமாக கருதப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் மக்கள் தொகை பெருகும் சூழலினால், நகர்ப்புறங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தவிர ஊரக பகுதிகளை மக்களின் வசதிக்கேற்ப அருகில் உள்ள பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இத்துடன் திருச்செங்கோடு, உடுமலை மற்றும் பழனி ஆகியவற்றை தேர்வுநிலை நகராட்சிகள் சிறப்பு நிலைக்கு தரம் உயர்த்தப்படுகின்றன. மேலும், கூடுவாஞ்சேரி, பல்லடம் மற்றும் ராமேஸ்வரம் ஆகியவை தேர்வு நிலை நகராட்சிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன.
கூடுதலாக, மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகியவை முதல் நிலை நகராட்சிகள் ஆகின்றன. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.