வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.
திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை, இடைவிடாது பெய்ததால், பொதுமக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவானது. குறிப்பாக, மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, சமயபுரம், நவல்பட்டு, தில்லை நகர், பொன்மலை, விமான நிலையம், அரியமங்கலம், அம்பிகாபுரம், காட்டூர் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். மேலும், மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.கே.கார்த்தி உள்பட மாநகராட்சி அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகபட்சமாக புள்ளம்பாடியில் 94.2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. திருச்சி மாநகர் ஜங்ஷன் பகுதியில் 65.4 மில்லி மீட்டர் மழைபெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 52.26 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் ஆய்வு செய்தார். மேலும், அனைத்து பணிகளையும் உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தஞ்சை மாவட்டத்திலும், கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பயிர்கள் அனைத்தும் அழுகும் அபாயத்தில் உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், மழையின் காரணமாக வீட்டின் சுற்றுச் சுவர்களும் இடிந்தது. இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை க. அன்பழகன், நேரில் சென்று ஆய்வு செய்தார்.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“